ஹரியானா ஐபிஎஸ் அதிகாரி புரன் குமார் தற்கொலை: சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மனைவி அம்னீத் குமார் கோரிக்கை
ஹரியானாவில் துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி புரன் குமாரின் தற்கொலைக் குறிப்பில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி மற்றும் ஐஏஎஸ் அதிகாரி அம்னீத் பி. குமார், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியிடம் மனு அளித்துள்ளார்.
சண்டிகர் செக்டர் 11-ல் உள்ள வீட்டில், ஹரியானா ஏடிஜிபி புரன் குமார் (2001 பேட்ச்) அக்டோபர் 7-ஆம் தேதி தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். அவரின் மனைவி அம்னீத் பி. குமார், ஹரியானா அரசின் வெளிநாட்டு ஒத்துழைப்புத் துறையில் செயலராக பணிபுரிகிறார். சம்பவத்தின் போது, அவர் முதல்வர் தலைமையிலான குழுவுடன் ஜப்பான் பயணத்தில் இருந்தார். கணவரின் மரணச் செய்தி அறிந்ததும் உடனே இந்தியா திரும்பினார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் நயாப் சிங் சைனி, இன்று சில உயரதிகாரிகளுடன் சேர்ந்து செக்டர் 24-ல் உள்ள அம்னீத் குமாரின் இல்லத்துக்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் புரன் குமார் மரண விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
பின்னர் அவர் அளித்த மனுவில், “புரன் குமாரின் தற்கொலைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உயர் அதிகாரிகள் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். எங்கள் குடும்பத்துக்கு நிலையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். தற்கொலைக் குறிப்பு மற்றும் புகார் இருந்தபோதிலும் இதுவரை எஃப்ஐஆர் பதிவு செய்யாதது வேதனையளிக்கிறது.
என் கணவரை துன்புறுத்தி, மனரீதியாக சித்திரவதை செய்து தற்கொலைக்கு தள்ளியவர்களை சட்டத்தின்படி தண்டிக்க வேண்டும். தற்கொலைக் குறிப்பு முக்கியமான ஆதாரமாக கருதப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த வழக்கில் பெயர் உள்ள சக்திவாய்ந்த அதிகாரிகள் என்னையும் என் குடும்பத்தினரையும் பழிவாங்கும் முயற்சி மேற்கொள்வார்கள் என்ற அச்சம் உள்ளது. எனவே, எங்களுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பு அவசியம். என் கணவர் பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்தவர்; சமூகத்தின் நம்பிக்கையாய் இருந்தவர். அவரின் மரணம் சமூகத்தில் பெரும் துயரத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தற்கொலைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டவர்கள்மீது பிஎன்எஸ் பிரிவு 108 மற்றும் பட்டியல் சாதிகள், பழங்குடியினர் சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
புரன் குமார் தட்டச்சு செய்யப்பட்ட 8 பக்க தற்கொலைக் குறிப்பில் ஆகஸ்ட் 2020 முதல் சில உயர் அதிகாரிகள் தொடர்ந்து அவரை சாதி அடிப்படையில் பாகுபாடு செய்து, மனரீதியாக துன்புறுத்தி, பொது அவமானம் ஏற்படுத்தியதாக பதிவு செய்துள்ளார்.