பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வாபஸ்!
தெற்கு பிலிப்பைன்ஸ் மின்தனோவோ பகுதியில் இன்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பலாவ் நாடுகளுக்காக ‘அழிவுகரமான சுனாமி’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கவியல் நிறுவனம் தெரிவித்ததாவது:
இந்த நிலநடுக்கம் 20 கிலோமீட்டர் ஆழத்தில் மின்தனோவோவின் கடலோரப் பகுதியில் ஏற்பட்டது. அதனால் அங்குள்ள பல நகரங்களில் கடலோர மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது. “உயிருக்கு ஆபத்தான அலைகள் 300 கிமீ தூரம் வரை உருவாகலாம்” என எச்சரிக்கப்பட்டது.
இதே நேரத்தில், இந்தோனேசியா தனது வடக்கு சுலவேசி மற்றும் பப்புவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. அங்கு சிறிய அளவிலான அலைகள் மட்டுமே பதிவாகியதாக கூறப்பட்டது.
சமீபத்திய தகவலின்படி, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) அறிவித்ததாவது —
“பிலிப்பைன்ஸ், பலாவ், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இனி சுனாமி அச்சுறுத்தல் இல்லை.”
தற்போது பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய கடற்கரைகளில் சிறிய அலைகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசியில் 17 செ.மீ (6.7 அங்குலம்) உயரம் வரை அலைகள் ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் பெரிய சேதம் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், சிறிய அளவிலான கடல் கொந்தளிப்புகள் இன்னும் சில மணி நேரங்கள் நீடிக்கக்கூடும் என பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.