‘நான் விளையாடத் தயாராகவே இருக்கிறேன்’ – ஆஸ்திரேலியா தொடருக்கு தேர்வாகாத முகமது ஷமி மனம் திறப்பு

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, அணித் தேர்வில் இடம் பெறாமல் இருப்பது குறித்து தனது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக ஷமி எந்த வடிவத்திலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) இடம்பெறாமல் இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணித் தேர்வில் கம்பீர்–அகார்கர் இருவரின் செல்வாக்கு குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஹர்ஷித் ராணா திடீரென அணிக்கு திரும்பியதற்கான நியாயமான விளக்கம் இதுவரை வழங்கப்படவில்லை என்பதும் விவாதமாகியுள்ளது.

இந்த சூழலில், முகமது ஷமி ஒரு யூடியூப் சேனல் பேட்டியில் கூறியதாவது:

“அணியில் தேர்வு செய்யப்படுவது எனது கையில் இல்லை. அது தேர்வுக்குழு, கேப்டன், கோச் ஆகியோரின் முடிவு. அவர்கள் எனக்கு இன்னும் சிறிது நேரம் தேவை என நினைத்தால், அது அவர்களது விருப்பம். ஆனால் நான் முழுமையாக தயாராகவே இருக்கிறேன். என் பயிற்சி நன்றாக நடைபெறுகிறது. உடல்நிலையும் சிறப்பாக உள்ளது.

துலீப் டிராபி போட்டிகளில் 35 ஓவர்கள் வீசியபோது நன்றாகவே ரிதம் கிடைத்தது. உடல்தகுதியில் பிரச்சினையில்லை. எனவே, நான் எந்த நேரத்திலும் விளையாடத் தயாராக இருக்கிறேன். ஆனால் தேர்வு எனது கட்டுப்பாட்டில் இல்லை,” என ஷமி தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசத்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள் எடுத்து மீண்டெழுந்த ஷமி, பின்னர் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விக்கெட் எடுக்க முடியவில்லை. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 விக்கெட்டுகள் பெற்றார்; பைனலில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இப்போது, ஷமியின் அணித் தேர்வு குறித்து எந்தரும் வலியுறுத்தாமல் இருப்பது கவலையளிக்கிறது. அவரின் சர்வதேச வாழ்க்கை இத்துடன் முடிவடையக் கூடுமா என்ற கேள்வியும் எழுகிறது. அப்படி நடந்தால், அது இந்திய கிரிக்கெட்டிற்கே பெரிய இழப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box