ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன் மின்னல் ஆட்டம்: முதல் நாளில் இந்தியா 318 ரன்கள் குவிப்பு

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் தொடக்க நாளில் இந்திய அணி 318 ரன்கள் சேர்த்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் சிறப்பாக ஆடி ரசிகர்களை கவர்ந்தனர்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி தற்போது இந்தியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக, இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். இது அவரது தலைமையிலான அணிக்கு முதல் டாஸ் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது; இதற்கு முன் ஆறு போட்டிகளில் டாஸ் இழந்திருந்தார்.

இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ராகுல் 38 ரன்களில் வெளியேறினார். அதன் பின்னர் சாய் சுதர்ஷன் மைதானத்தில் வந்து ஆட்டத்தை நிலைநிறுத்தினார். ஜெய்ஸ்வாலுடன் இணைந்து அவர் சிறந்த கூட்டணியை அமைத்தார். இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்தனர். சாய் சுதர்ஷன் 165 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார்.

மறுபக்கம், ஜெய்ஸ்வால் 253 பந்துகளில் 173 ரன்கள் அடித்து அபாரமாக விளையாடினார். கேப்டன் கில் 68 பந்துகளில் 20 ரன்களுடன் ஆட்டத்தில் உள்ளார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்தது.

மீதமுள்ள 8 விக்கெட்டுகள் கையில் உள்ள நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பெரும் ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box