முந்திரி, பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வளர்ந்த எருமைக்கு ரூ.8 கோடி மதிப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட்டில் உள்ள சர்தார் வல்லபபாய் பட்டேல் வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு சந்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வில் வட இந்திய மாநிலங்களிலிருந்து பல விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயி நரேந்திரசிங் தனது எருமையை காட்சிக்கு வைத்துள்ளார்.

மீரட் சந்தையில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்த எருமைக்கு ரூ.8 கோடி வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் உரிமையாளர் நரேந்திரசிங், தன் எருமையை விற்க விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். அந்த எருமைக்கு அவர் ‘எம்எல்ஏ’ என பெயரிட்டுள்ளார்.

இதுகுறித்து நரேந்திரசிங் கூறியதாவது:

“என் எருமை ‘முர்ரா’ எனப்படும் உயர்தர இனத்தைச் சேர்ந்தது. இதற்கு தினமும் எட்டு லிட்டர் பால், நெய், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவை உணவாக வழங்கப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, வட இந்தியாவின் எந்த சந்தைக்கு எடுத்துச் சென்றாலும் என் ‘எம்எல்ஏ’ எருமை சிறப்பு பரிசுகளைப் பெற்று வருகிறது,” என்றார்.

குறிப்பிடத்தக்கது என்னவெனில், ஹரியானாவைச் சேர்ந்த விவசாயி நரேந்திரசிங் பத்மஸ்ரீ விருது பெற்றவர் ஆவார். தனது எருமையின் உயிரணு (semen) விற்பனையின் மூலம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய்களை வருமானமாகப் பெற்று வருகிறார்.

Facebook Comments Box