விழுப்புரத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ ஜனகவல்லி நாயிகையுடன் கூடிய ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் தேரோட்டம் இன்று (ஜூன் 11) காலை சிறப்பு சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாநகரில் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த மாதம் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதன் பின், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு தினமும் விசேஷ அபிஷேகமும் பூஜைகளும் நடந்தன. இதனடிப்படையில், சிம்ம வாகனம், ஹனுமான் வாகனம், சேஷன் வாகனம், கருடன் வாகனம், யானை வாகனம், திருப்பல்லக்கு, இந்திர விமானம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதற்கிடையில், கடந்த 9-ம் தேதி இரவில், திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இன்றைய முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடந்தது. இந்நிகழ்வில் உற்சவர் திருக்கோலத்தில் சிறப்பாக அலங்கரிக்கப் பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர், ஸ்ரீவைகுண்டவாசப் பெருமாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதன்பின், ‘ஓம் நமோ நாராயணாய’, ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற முழக்கங்களுடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். காமராஜர் தெருவிலிருந்து தொடங்கிய தேரோட்டம், மேல வீதி, வடக்கு தெரு, திருவிக வீதிகள் வழியாக சென்று கோயிலில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, இறைவனை தரிசித்து அருள் பெற்றனர். நாளை மறுநாள் இந்த பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.