சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் தொடங்கியது
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்த நிகழ்வு சித்சபைக்கு எதிரிலுள்ள கொடிமரத்தில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடைபெற்றது. திருவிழாவின் தொடக்கமாக உற்சவ ஆச்சாரியர் சிவகைலாஷ் தீட்சிதர் கொடியேற்றி, பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.
ஜூன் 24 முதல் 30 வரை சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா அருளப்பெருகிறார்.
ஜூலை 1-ம் தேதி தேர்த் திருவிழா நடைபெற உள்ளது. அதே நாளில் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில், ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத நடராஜர் மூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறும்.
ஜூலை 2-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை மகாபிஷேகம் நடைபெறும். அதற்குப் பிறகு காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடைபெறும். பிற்பகலில் பஞ்சமூர்த்தி வீதியுலா, ஆனித் திருமஞ்சன தரிசனம் மற்றும் ஞானகாச சித்சபை பிரவேசம் நடைபெறும்.
ஜூலை 3-ம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதியுலா வந்து திருவிழா நிறைவடைகிறது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் சிறப்பாக செய்துவருகிறார்கள்.