பயங்கரவாத எதிர்ப்பு முயற்சியில் இந்தியாவுடன் ஒத்துழைக்க எத்தியோப்பியா உறுதி: துணைப் பிரதமர் ஆதம் ஃபரா
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 உயிரிழப்புகளை அடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்த மத்திய அரசு பல்வேறு நாடுகளுக்கு தூதுக்குழுக்களை அனுப்பியுள்ளது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே தலைமையிலான இந்திய தூதுக்குழு எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவிற்கு சென்றது. அங்கு அவர்கள், துணைப் பிரதமர் ஆதம் ஃபராவைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, இந்தியாவுடன் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்க்க எத்தியோப்பியா உறுதியாக இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து எத்தியோப்பியாவிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பதிவில், “ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் எத்தியோப்பிய அரசுத் தரப்புகளுடன் பயனுள்ள கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. பயங்கரவாதத்தை எதிர்க்கும் வழிமுறைகள் குறித்து பரஸ்பர கருத்துகள் பரிமாறப்பட்டன. இது இந்தியா–ஆப்பிரிக்கா இடையேயான கூட்டுறவை வலுப்படுத்தும்” என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்திய குழு எத்தியோப்பியாவின் முன்னாள் பிரதமர் ஹைலேமரியம் டெசலெக்னையும் சந்தித்தது. அவர், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா–ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டில் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்தின் போது, இந்திய தூதுக்குழு அங்குள்ள ஊடகங்கள், கல்வியாளர்கள், சிவில் சமூகம் மற்றும் இந்தியர் சமூகத்தினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளது.
இந்த குழுவில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் தூதர் சையத் அக்பருதீன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.