ஏர் இந்தியா விமான விபத்து: பங்குச் சந்தையில் 8% சரிவை சந்தித்த போயிங் நிறுவனம்

அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல விமான உற்பத்தி நிறுவனமான போயிங்கின் பங்குகள், NASDAQ பங்கு சந்தையில், முன்னதாக நடைபெற்ற வர்த்தகத்தில் 8 சதவீதம் குறைந்தன.

குஜராத்தில் உள்ள அகமதாபாத்திலிருந்து, இன்றைய மதியம் 1.38 மணிக்கு லண்டன் நகருக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-7 வகை விமானம், புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் தரையிறங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணம் செய்த மொத்தம் 242 பயணிகளில், 169 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 53 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள், 7 பேர் போர்ச்சுகல் நாட்டு குடியினர்கள் மற்றும் ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் என ஏர் இந்தியா தகவல் தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை தெளிவாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், விபத்துக்குள்ளானது போயிங் நிறுவனம் தயாரித்த விமானம் என்பதால், அமெரிக்க NASDAQ சந்தையில் அதன் பங்குகள் 8.02% குறைந்து, $196.83 என்ற விலைக்கு விற்பனையாகின. இந்த சரிவு சந்தை திறக்குமுன் நிகழ்ந்தது என கூறப்படுகிறது. NASDAQ சந்தை இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு திறக்கப்படுகிறது.

விபத்துக்குப் பிறகு, போயிங் நிறுவனம் தனது எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) பதிவில், “விபத்துக்குள்ளான 171-வது விமானம் குறித்து ஏர் இந்தியாவுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளோம். பயணிகள், விமான ஊழியர்கள், மீட்பு குழுவினர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவில் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா தலைவர் என். சந்திரசேகரன், தனது எக்ஸ் பதிவில், “அகமதாபாத்-லண்டன் கேட்விக் விமானம் 171, இன்று ஒரு பேரழிவான விபத்தில் சிக்கியதை மிகுந்த துக்கத்துடன் உறுதிப்படுத்துகிறேன். இந்த சோகமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடனும் நெருக்கமான உறவினர்களுடனும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்களும் நினைவுகளும் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும், “இந்த சிக்கலான நேரத்தில், பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவு வழங்குவதே எங்களின் முக்கியமான பணியாகும். மீட்புக் குழுக்களுக்கு உதவ மற்றும் தேவையான சிகிச்சை, ஆதரவை வழங்க எங்கள் தரப்பில் அனைத்தையும் செய்து வருகிறோம். சம்பந்தப்பட்ட உண்மையான தகவல்கள் கிடைக்கும் போதெல்லாம், நாங்கள் தொடர்ந்து புதுப்பிப்புகளை வழங்குவோம். அவசர உதவி மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது மற்றும் தகவல் தேடும் உறவினர்களுக்காக ஆதரவு குழு உருவாக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box