பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவும் முகமது யூனுஸ்: வங்கதேச மாணவர்கள் லீக் தலைவர் கடும் குற்றச்சாட்டு

“பாகிஸ்தானை ஆதரிக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கு இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸ் ஆதரவு வழங்குகிறார்” என வங்கதேச மாணவர் லீக் தலைவர் சதாம் உசேன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான ஆட்சி முடிவுற்ற பிறகு, நாட்டின் இடைக்கால நிர்வாகத்தில் முக்கிய ஆலோசகராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிராக அவாமி லீக் சார்ந்த மாணவர் லீக் தலைவரான சதாம் உசேன் ஒரு பேட்டியில் கூறியதாவது:

“1971-ம் ஆண்டில் பாகிஸ்தானுடன் நடந்த விடுதலைப் போரினை யூனுஸ் முற்றிலும் மறந்து விட்டார். பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள நெருக்கத்தால், வங்கதேச சுதந்திரத்துக்காக நிகழ்ந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் குறைத்துக் காட்டுகிறார். இது வரலாற்றை மாற்றும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானுடன் அவரது நட்பு எங்களுக்குப் பெரும் கவலையைக் ஏற்படுத்துகிறது. மேலும் பாகிஸ்தானின் இரகசிய புலனாய்வு அமைப்பு ஐ.எஸ்.ஐ மற்றும் பல தீவிரவாத அமைப்புகளுக்கும் அவர் துணைபுரிகிறார். இது வங்கதேசத்தின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாகும்.

1971-ல் நிகழ்ந்த சுதந்திரப்போரில் பலரது உயிர்தியாகமும் இப்போது அவமதிக்கப்படுகின்றது. பாகிஸ்தான் என்றே இனப்படுகொலை செய்த நாடு. அந்த நாட்டுடன் தொடர்புள்ள ஜமாத் இ இஸ்லாம், ஹிஸ்ப் உத் தஹ்ரிர், அன்சருல்லா பங்கலா டீம், லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிர அமைப்புகள் தற்போது வங்கதேச அரசால் நேரடியாகவே ஆதரிக்கப்படுகின்றன.

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புடன் இணைந்து செயல்படுவதால், வங்கதேசம் இன்று சர்வதேச தீவிரவாதத்தின் மையமாக மாறி வருகிறது.

இந்நிலையில், நாட்டின் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அவர்கள் அச்சத்துடன் வாழ நேரிடுகிறது. கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு பின் 2,200-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் உயிரிழப்புகள், சொத்து சேதம், இடம்பெயர்வு, கோயில்கள் மீது தாக்குதல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

வங்கதேசத்தில் இன்று ஜனநாயகத்தின் பங்களிப்பு குறைந்துவிட்டது. மத அடிப்படையிலான, பாசிச சூழல் உருவாகியுள்ளது. இதற்குத் தீர்வாக அவாமி லீக் ஆட்சியே ஒரே வழியாக இருக்க முடியும். அது மட்டுமே மதச்சார்பற்ற, நிலையான அரசு அமைக்கக் கூடியது.”

Facebook Comments Box