யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம் இல்லை – நிதி அமைச்சகம் விளக்கம்

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம் இல்லை – நிதி அமைச்சகம் விளக்கம்

யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்காக வணிக தள்ளுபடி விகிதம் (MDR) எனப்படும் கட்டணத்தை வசூலிக்கப்படவுள்ளதாக பரவி வரும் தகவல்கள் உண்மையற்றவை என மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சகம் தனது எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) பதிவில் கூறியிருப்பதாவது:

“யுபிஐ மூலமான பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம் விதிக்கப்படும் என்ற தகவல் அடிப்படையற்றது மற்றும் தவறானது. இத்தகைய அவதூறு தகவல்கள் மக்களை தவறாக வழிநடத்தக்கூடும், தேவையற்ற பயத்தையும் ஏற்படுத்தக்கூடும். அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க உறுதிபூண்டுள்ளது. எனவே யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எவ்வித கட்டணமும் விதிக்கப்படுவதில்லை” என்று கூறியுள்ளது.

எம்டிஆர் என்பது என்ன?

எம்டிஆர் (MDR) என்பது வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து டிஜிட்டல் முறையில் பணம் பெறும் போது வங்கிகளுக்கு செலுத்தும் கட்டணமாகும். இது பரிவர்த்தனை தொகையின் ஒரு சதவீதமாகக் கணக்கிடப்படுகிறது.

அண்மையில் “அதிக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம் விதிக்கப்படும்” என வெளியான தகவல்களுக்கு பின்னர், இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.

யுபிஐ பரிவர்த்தனைகளில் வளர்ச்சி:

2025 மே மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகள் ரூ.25.14 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5% வளர்ச்சி என NPCI வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரலில் பரிவர்த்தனை மதிப்பு ரூ.23.94 லட்சம் கோடியாக இருந்தது. பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் ஏப்ரலில் 1,789.3 கோடியில் இருந்து, மே மாதத்தில் 1,867.7 கோடியாக அதிகரித்துள்ளது.

Facebook Comments Box