இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் கேப்டனான ஷுப்மன் கில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் கலவையானவர் என இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்துள்ள கருத்துகளை விரிவாக பார்ப்போம்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி, வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாக இருக்கிறது. தொடக்கப் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெற்ற நிலையில், ஷுப்மன் கில் அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஜாஸ் பட்லர் பேசும் போது, ஷுப்மன் கிலைப் பற்றிய கருத்துகளை பகிர்ந்தார். சமீபத்தில் முடிந்த 2025-ஆம் ஆண்டின் ஐபிஎல் சீசனில், இருவரும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தனர். அந்த அணிக்கு கேப்டனாக கில் செயல்பட்டார்.
“ஷுப்மன் கில் மிகவும் ஈர்க்கக்கூடிய இளம் வீரர். அவரது அமைதியான தன்மை அனைவரையும் கவரக்கூடியது. அவர் பேசும் போதும் மிக சுருக்கமாக பேசுவார். ஆனால் கிரிக்கெட் மைதானத்தில் அவர் மிகவும் உற்சாகத்துடன் செயல்படுகிறார். அவர் ரோஹித் சர்மாவின் அமைதியையும், விராட் கோலியின் தீவிரத்தையும் ஒருங்கிணைத்தவன் என்று நான் நினைக்கிறேன்.
கோலி மிகவும் ஆவேசமானவர்; இந்திய அணியின் அணுகுமுறையையே மாற்றியவர். அதேசமயம் ரோஹித் ஒரு அமைதியான, தைரியமான கேப்டன். இந்த இருவரிடமிருந்தும் கில் நிறைய கற்றுள்ளார். இருப்பினும், களத்தில் கில் தனது தனித்துவத்தை காட்டக்கூடியவர். பேட்டிங் செய்யும் போது அவர் முழுமையாக ஒரு பேட்ஸ்மேன் ஆக இருக்க வேண்டும்; மற்ற நேரங்களில் தான் கேப்டனாக செயல்பட வேண்டும்” என பட்லர் தெரிவித்தார்.