மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் ஆடவர், மகளிர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் இந்தியா வெற்றிகரமாக சாம்பியன் பட்டங்களை கைப்பற்றி பெருமை சேர்த்துள்ளது.
ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றும் அபய் சிங் கூட்டணி, பாகிஸ்தானைச் சேர்ந்த நூர் ஜமான் மற்றும் நசீர் இக்பால் ஜோடியை 2-1 (9-11, 11-5, 11-5) என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டி 88 நிமிடங்கள் நீடித்தது.
மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில், இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் அனஹத் சிங் ஜோடி, மலேசியாவின் அய்னா அமனி மற்றும் ஸின் யிங் யி ஜோடியை 2-1 (8-11, 11-9, 11-10) என்ற கணக்கில் தோற்கடித்து பட்டம் வென்றது. இந்த ஆட்டம் 35 நிமிடங்களில் முடிந்தது.
கலப்பு இரட்டையர் இறுதியில் இந்திய ஜோடி அபய் சிங் மற்றும் அனஹத் சிங், மலேசியாவின் ரேச்சல் அர்னால்ட் மற்றும் அமீசன்ராஜ் சந்திரன் ஜோடியை நேரடி செட்களில் 2-0 (11-9, 11-7) என்ற கணக்கில் வென்றது. இந்த ஆட்டம் 28 நிமிடங்களில் முடிவடைந்தது.