உஸ்பெகிஸ்தான் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.
இந்தப் புகழ்பெற்ற செஸ் தொடர், உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, அரவிந்த் சிதம்பரம் மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோருடன், உலகத் தரத்தில் உள்ள முன்னணி 10 வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டியின் 10 சுற்றுகள் முடிவில், இந்திய வீரர் பிரக்ஞானந்தா மற்றும் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த நோடிர்பெக் அப்துசட்டோரவ், ஜவோகிர் சின்டரோவ் ஆகியோர் தலா 5.5 புள்ளிகள் பெற்று சமமாக இருந்தனர். இதையடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க டைபிரேக்கர் சுற்றுகள் நடைபெற்றன. இதில் 2 சுற்றுகள் நடைபெற்றதிலும், 1.5 புள்ளிகளை பெற்ற பிரக்ஞானந்தா இறுதியாக சாம்பியனாக விருதுபெற்றார். அவருக்கு சுமார் ரூ.17 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் வாயிலாக, உலக செஸ் தரவரிசையில் பிரக்ஞானந்தா 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இவர் தற்போது 2778.3 புள்ளிகளை பெற்றுள்ளார், அதே நேரத்தில் குகேஷ் 2776.6 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார். இதன்மூலம், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உலக தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் இடம்பிடித்து வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளனர்.