பர்மிங்காமில் இன்று இந்தியா–இங்கிலாந்து 2-வது டெஸ்ட்!
இந்தியா–இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன்–டெண்டுல்கர் கோப்பை தொடரின் 2வது போட்டி இன்று பர்மிங்காமில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
ஹெட்டிங்லியில் நடந்த முதல் டெஸ்டில், 371 ரன்கள் இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் பல சதங்கள் பதிவாகியிருந்தாலும், பந்துவீச்சு பலவீனமடைந்ததால் தோல்வியடைந்தது.
தொடரில் 0-1 என பின்தங்கிய இந்திய அணி, பர்மிங்காமில் இன்று இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதுகிறது. இங்கு வெப்பம் அதிகமாகவும், புற்கள் நிறைந்த பீட்ச் இருப்பதால் பேட்டிங்கிற்கு ஏற்ற சூழல் நிலவுகிறது. எனவே இந்திய பந்துவீச்சு சவாலாக இருக்கக்கூடும்.
இந்த போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிகிறது. அவ்வாறு ஆனால் அர்ஷ்தீப் சிங் அல்லது ஆகாஷ் தீப் அறிமுகம் பெறலாம். பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. அதனால் அவர் தன் பந்துவீச்சு முறையில் மாற்றங்களை மேற்கொள்ளக்கூடும்.
மேலும் இந்திய அணி ஒரு கூடுதல் சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்க வாய்ப்புள்ளது. குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம்பெறலாம். ஷர்துல் தாக்குருக்கு பதிலாக நித்திஷ் குமார் ரெட்டி சேர்க்கப்படலாம்.
பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரிடம் எதிர்பார்ப்பு அதிகம். அறிமுக ஆட்டத்தில் திறமை காட்டத் தவறிய சாய் சுதர்சன், மற்றும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய கருண் நாயர், தங்கள் திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
முந்தைய போட்டியில் இந்திய அணியின் பின்வரிசை பேட்டிங் நிம்மதியளிக்காத நிலையில் இருந்தது. பீல்டிங்கிலும் 7 கேட்ச்கள் தவறப்பட்டன. இந்த குறைகளை சரிசெய்வதில் இந்திய அணி கவனம் செலுத்தும்.
மற்றொரு புறம், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, பாஸ்பால் அணுகுமுறையால் வெற்றி பெற்றது. டக்கெட், கிராவ்லி, போப், ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் ஆகியோர் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஆபத்தாக இருக்கலாம். வோக்ஸ் தனது சொந்த மைதானத்தில் சிறப்பாக செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பர்மிங்காமில் இந்தியாவின் ரெக்கார்டு:
இந்தியா இங்கு இதுவரை 8 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இதில் 7 தோல்விகள், 1 டிரா. வெற்றி இல்லை. கடைசியாக 2022-ல் இங்கிலாந்து 378 ரன்கள் இலக்கை எட்டிப் பெருமை பெற்றது.