பிரதமா் நரேந்திர மோடியை கடுமையாக விமா்சித்து தினமும் பேச வேண்டும் என்று கட்சி தன்னை வலியுறுத்துவதாகக் கூறி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் தினேஷ் திரிவேதி தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார்.
இதனையடுத்து அவர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகின. தினேஷ் திரிவேதி பாஜகவில் இணைந்தால் அவரை வரவேற்போம் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய தினேஷ் திரிவேதி, பாஜக மூத்த தலைவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையுள்ளது. பாஜகவில் இணைந்தால் என்னை வரவேற்கத் தயாராகவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் எந்த கேள்விகளும் இல்லை. ஆனால் நான் மனரீதியாக சமநிலையை அடைந்து சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.
ஏற்கெனவே, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மாநில அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments Box