சில மாநிலங்களில், நக்சலைட் ஒழிப்புப் பணிகளை, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், ‘கோப்ரா’ பிரிவு மேற்கொள்கிறது. இதில் முதல் முறையாக, 34 பெண், ‘கமாண்டோ’க்கள், சேர்க்கப்பட்டனர்.
சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், 35 ஆண்டுகளுக்கு முன், பெண் போலீசாரின் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. இது உலக அளவில், துணை ராணுவப் பிரிவில் உருவாக்கப்பட்ட, முதல் பெண்கள் ‘பட்டாலியன்’ ஆகும்.இதன்பின், பெண்கள் பட்டாலியன் எண்ணிக்கை அதிகரித்ததுடன், அவர்கள், பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் அடங்கிய, ‘கோப்ரா’ என்ற தனிப்பிரிவு, 2009ல் அமைக்கப்பட்டது; இதில் தற்போது, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இந்த அதிரடிப்படை பிரிவில், 34 பெண், ‘கமாண்டோக்கள்’ இணைக்கப்பட்டனர். சி.ஆர்.பி.எப்., முதல் பெண்கள் படை உருவாக்கப்பட்ட, 35ம் ஆண்டு விழா நாளான நேற்று, 34 பெண் கமாண்டோக்கள் அதிரடிப்படையுடன் இணைக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு காடுகளில் வசித்தல், மலையேற்றம், சிறப்பு ஆயுதங்களை கையாளுதல் ஆகியவை குறித்து, மூன்று மாதங்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இதன்பின், நக்சலைட்டுகள் உள்ள பகுதிகளுக்கு, அவர்கள் அனுப்பி வைக்கப்படுவர் என, சி.ஆர்.பி.எப்., அதிகாரிகள் கூறினர்.
Facebook Comments Box