மியான்மர் பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மியான்மர் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டது. மேலும் நாட்டில் ஓராண்டிற்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனர். 
மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டுள்ள ராணுவத்தைக் கண்டித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். யாங்கோனில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். 
இந்நிலையில் நாடு முழுவதும் இணைய சேவையை நிறுத்தி வைப்பதாக மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு வார காலத்திற்குள் பிறப்பிக்கப்பட்ட இரண்டாவது இணையத் தடை உத்தரவு இதுவாகும். முன்னதாக மியான்மரில் சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments Box