நம் விமானப் படையில் இருக்கும் பழைய போர் விமானங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு, புதிய ரக போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, கடந்த, 2018ல், 1,500 கோடி ரூபாய் செலவில், 114 புதிய ரக போர் விமானங்களை வாங்க, வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டன. அமெரிக்காவை சேர்ந்த, ‘போயிங், லாக்ஹீட் மார்ட்டின்’ மற்றும் ஐரோப்பிய நாடான, சுவீடனை சேர்ந்த, ‘சாப் ஏபி’ ஆகிய நிறுவனங்கள், ஒப்பந்த புள்ளியில் பங்கேற்றன.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த போர் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் தயாரித்துள்ள, ‘எப்-15இஎக்ஸ்’ என்ற அதிநவீன போர் விமானம் குறித்த தகவல்களை கேட்டு, இந்திய விமானப்படை விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் இந்த போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்க, போயிங் நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை போயிங் நிறுவன உயரதிகாரி அங்குர் கனக்லேகர் உறுதிபடுத்தினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்தியாவுடன் இதுகுறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, இனி நேரடியாகவே பேச முடியும். அடுத்த வாரம் பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சியில் இதுகுறித்து கூடுதல் ஆலோசனை நடத்தப்படலாம். நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட ‘எப்-15இஎக்ஸ்’ போர் விமானங்கள், அனைத்து வானிலைகளிலும், இரவு, பகல் என எல்லா நேரங்களிலும் சிறப்பாக செயல்பட கூடியவை. இது இந்திய விமானப்படைக்கு பெரிதும் உதவும்’ எனக் கூறினார்.
இதேபோல், அமெரிக்காவின் மற்றொரு போர் விமான தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்டின், எப் 21 போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்க திட்டமிட்டுள்ளது.
The post இந்தியாவுக்கு அதிநவீன போர் விமானங்களை விற்பனை செய்ய…. அமெரிக்க அரசு ஒப்புதல் appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box