சிரியாவின் முன்னாள் அதிபர் ஆசாத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அந்நாட்டில் அரசியல் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமிய போராளிகளின் பிடியில் சிக்கியுள்ள சிரியா இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக மாறுமா? சிரியாவில் ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் மாற்றம் இந்தியாவை பாதிக்குமா? பற்றிய செய்தி தொகுப்பு
2010 முதல், ஆட்சியாளர்களை வெளியேற்ற அரபு நாடுகள் தொடர்ச்சியான வெற்றிகரமான புரட்சிகளைக் கண்டன. துனிசியா, எகிப்து, லிபியா மற்றும் ஏமன் போன்ற நாடுகளில் அரபு SPRING எனப்படும் பயங்கரவாத ஆயுதக் குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன.
இந்த வரிசையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவில் தொடங்கிய இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் உள்நாட்டு போராக மாறி தற்போது இஸ்லாமிய ஆயுதக்குழு ஆட்சியை பிடித்துள்ளது.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடாக இருந்தாலும், சிரியாவின் அரசியலமைப்பு எந்த மதத்தையும் குறிப்பிடவில்லை. சிரியா ஒரு குடியரசு. அரசியலமைப்பு ரீதியாகவும் மதச்சார்பற்ற நாடு.
1970 களின் முற்பகுதியில் இருந்து அசாத் குடும்பம் 54 ஆண்டுகளாக சிரியாவை ஆட்சி செய்து வருகிறது. சிரியாவின் தலைநகரை இஸ்லாமிய போராளிகள் தங்களது சமீபத்திய தாக்குதலை ஆரம்பித்து 11 நாட்களில் கைப்பற்றியுள்ளனர்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டை விட்டு வெளியேறினார். அதிபர் பஷர் அல் ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிரியாவில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவின் தலைவர் அபு முகமது அல் ஜவ்லானி தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அனைத்து அரசு துறைகளும் பிரதமரின் கண்காணிப்பில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
தலைநகர் டமாஸ்கஸின் மையப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள உமையாட் சதுக்கத்தில் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
சிரியாவில் வசிக்கும் இந்திய குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதுடன், இந்திய குடிமக்கள் சிரியா செல்லவும் தடை விதித்துள்ளது.
இந்தியாவும் சிரியாவும் நீண்டகாலமாக நட்புறவை அனுபவித்து வருகின்றன. குறிப்பாக அசாத்தின் ஆட்சிக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் வலுப்பெற்றன. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை சிரியா ஆதரித்துள்ளது
பாலஸ்தீனம் மற்றும் கோலன் குன்றுகள் மீதான சிரியாவின் உரிமையை இந்தியா ஆதரிக்கிறது. மேலும் ஐநா பொதுச் சபையில், சிரியாவிற்கு எதிராக முன்மொழியப்பட்ட பொருளாதார தடைகளை ஆதரிக்க இந்தியா மறுத்துவிட்டது.
மேலும் கரோனா தொற்றுநோய்களின் போது, சிரியா மீதான பொருளாதாரத் தடையை நீக்குமாறு இந்தியா அழைப்பு விடுத்தது. அசாத்தின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி 2011 இல் நாட்டின் தெற்கில் தொடங்கியது. அது படிப்படியாக உள்நாட்டுப் போராக மாறியது.
சிரிய உள்நாட்டுப் போரின் போது, பல நாடுகள் சிரியாவை தனிமைப்படுத்தின. அரபு லீக்கில் இருந்து சிரியா வெளியேற்றப்பட்டாலும், இந்தியா சிரியாவை கைவிடவில்லை. சிரியாவுடன் இந்தியா தூதரக உறவுகளைப் பேணி வந்தது. சிரியா தலைநகரில் இந்தியா தூதரகத்தை தொடர்ந்து பராமரித்து வந்தது.
2003ல் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் சிரியாவுக்கு விஜயம் செய்தார். அப்போது, சிரியா தலைநகரில் இந்திய தொழில்நுட்பத்துடன் கூடிய உயிரி தொழில்நுட்ப மையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதுமட்டுமின்றி சிரியாவின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது. 2022 சிரியாவின் வெளியுறவு அமைச்சர் பைசல் மக்தத் இந்தியாவுக்கு வருகை தந்தார். இதைத் தொடர்ந்து, உள்நாட்டுப் போரால் துண்டாடப்பட்ட சிரியாவை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 280 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா கடனாக வழங்கியது.
2016 ஆம் ஆண்டில், உணவு மற்றும் மருந்து உட்பட 6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டன. கோவிட் சமயத்தில் இந்தியா 10 மெட்ரிக் டன் மருந்துகளை சிரியாவுக்கு அனுப்பியது.
2023 சிரியா பூகம்பத்தின் போது இந்தியா 30 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது. மேலும் STUDY IN INDIA திட்டத்தின் கீழ், சிரிய மாணவர்களுக்கு முதுநிலை மற்றும் Ph.Dக்கு மொத்தம் 1500 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிரியாவின் எண்ணெய் துறையில் இந்தியா இரண்டு குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளது. 2004 இல் ONGC மற்றும் IPR இன்டர்நேஷனல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மேலும், ஓஎன்ஜிசி, சீனாவின் சிஎன்பிசியுடன் இணைந்து சிரியாவில் முதலீடு செய்துள்ளது.
இந்தியா-வளைகுடா-சூயஸ் கால்வாய், சிரியாவை உள்ளடக்கிய மத்தியதரைக் கடல்-ஐரோப்பா வழித்தடத்தை மேம்படுத்துவதில் இந்தியா அதிக முதலீடு செய்துள்ளது. இந்தியாவில் இருந்து எண்ணெய், அரிசி பருத்தி, மருத்துவ ஜவுளிகள், சிரியாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சிரியாவுடனான இந்தியாவின் நல்லுறவு, மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாகும்.
சிரியாவில் ஆட்சி மாற்றம் ரஷ்யாவிலும் மற்ற மத்திய கிழக்கிலும் என்ன வகையான தாக்கத்தை அல்லது விளைவை ஏற்படுத்தும்? இதற்கு தெளிவான குறிப்பு எதுவும் இல்லை. இஸ்லாமிய தீவிரவாதிகளின் பிடியில் சிரியா ஆட்சி நடப்பது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என புவிசார் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.