அகமதாபாத் விமான விபத்து: விமானத்தின் முன்பகுதி மருத்துவ மாணவர் விடுதியில் விழுந்தது

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிறகு சில நிமிடங்களிலேயே, லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தின் முன்பகுதி, அகமதாபாத் பிஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதியின் கூரையில் விழுந்தது. ஏற்பட்ட சேதம் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

பிரிட்டன் தலைநகரை நோக்கிய இந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் மதியம் 1:38 மணிக்கு புறப்பட்டு, 5 நிமிடங்களில் விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் ஆகியோர் பயணித்த விமானம் (AI-171), பயணத்தின்போது விபத்துக்கு உள்ளான இடம் குறித்து ஆரம்ப தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் குறித்து பேசும் ஒரு மூத்த காவல் அதிகாரி, “விமானம் மருத்துவ மாணவர் விடுதியில் விழுந்ததாக தகவல் கிடைத்தது. 2-3 நிமிடங்களில் காவல் துறையினரும் மீட்புப் படைகளும் சம்பவ இடத்தை அடைந்தனர். சுமார் 70-80% மீட்புப் பணிகள் முடிவடைந்துள்ளன,” எனத் தெரிவித்தார். உயிரிழப்புகள் குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் இல்லை.

விபத்து நடந்த பகுதியில் ஆம்புலன்ஸ்கள் செல்லும் பாதைகள் தயார் நிலையில் உள்ளன. காவல் துறை சார்பில், “மருத்துவ விடுதி கட்டடத்தில் விமானம் மோதியுள்ளது. பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதனால் சாலைகள் திறந்திருக்கவும், பசுமை வழித்தடம் உருவாக்கவும் முடியும்,” எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “மறு அறிவிப்பு வரும் வரை விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிடம் விவரம் கேட்டறிந்தார். மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட அமைச்சர் அகமதாபாத்திற்கு விரைவில் வருவதாகவும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் பிரதமர் உத்தரவிட்டார்.

Facebook Comments Box