பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நேற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசினார். இந்தியா மேற்கொண்டு வரும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் வழங்கும் உறுதுணை பாராட்டத்துக்குரியதென அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, எஸ். ஜெய்சங்கர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான ஏழு நாள் உத்தியோகபூர்வ பயணத்தைத் தொடங்கினார். பஹல்காமில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கைக்கு ஒரு வாரம் கடந்திருந்த தருணத்தில் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டார்.

பயணத்தின் தொடக்கமாக, பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரத்தைச் சென்றடைந்த அவர் அந்நாட்டு முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், பிரஸல்ஸைத் தலையிடமாகக் கொண்ட ஐரோப்பிய யூனியனின் தலைவர்களையும் சந்தித்து, இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கிடையிலான கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியார்.

இதையடுத்து, அவர் நேற்று பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று தனது பயணத்தைத் தொடர்ந்தார். அங்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பாக சமூக வலைதளமான எக்ஸில் அவர் வெளியிட்ட செய்தியில், “பிரான்ஸ் அதிபரைச் சந்தித்ததில் பெருமை அடைகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்தேன். தீவிரவாதத்தை எதிர்த்து இந்தியா முன்னெடுக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்ததற்காக அவர் வெளியிட்ட உறுதியான செய்திக்கு நன்றியினை தெரிவித்தேன். நமது உறவின் ஆழம் மற்றும் நம்பிக்கையை இந்த உரையாடல்கள் பிரதிபலித்தன” என்று கூறியுள்ளார்.

Facebook Comments Box