அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வருக்கு மரியாதை

அகமதாபாத் அருகே நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடலுக்கு தற்போதைய முதல்வர் பூபேந்திர படேல் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அகமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தவறி விழுந்து தீப்பற்றிக் கொளுந்தி எரிந்து அழிந்தது. இந்த பயணத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். இதில் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவராக இருந்தார்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் தீயில் சிக்கி சிதைவடைந்த நிலையில் இருந்ததால், அவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 92 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 47 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை கூடுதல் கண்காணிப்பாளர் டாக்டர் ரஜ்னீஷ் படேல் தெரிவித்தார். மீதமுள்ள உடல்களுக்கான டிஎன்ஏ சோதனை தொடர்கிறது என்றும் கூறினார்.

விஜய் ரூபானியின் உடல் மூவர்ணக்கொடியுடன் பாதுகாப்பாக சுமந்துவரப்பட்டு, முதல்வர் பூபேந்திர படேல் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் ரிஷிகேஷ் படேல் மற்றும் ஹர்ஷ் சங்கவி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அவரது மனைவியும் இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது உடல் ராஜ்கோட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

டாக்டர் படேல் மேலும் கூறுகையில், 92 உடல்களில் 47 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் இரு குடும்பங்கள் இன்று இரவுக்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மேலும் 13 குடும்பங்கள் உடல்களை பெற்றுச் செல்லவுள்ளனர். 21 உடல்களை உறவினர்களுடன் ஆலோசித்த பிறகு ஒப்படைக்க முடிவு செய்யப்படும்.

இதுவரை அகமதாபாத் (12), பரோடா (5), மெஹ்சானா மற்றும் ஆனந்த் (தலா 4), கெடா மற்றும் பருச் (தலா 2), உதய்பூர், ஜோத்பூர், போடாட் மற்றும் ஆரவல்லி (தலா 1) ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உடலும் முழு மரியாதையுடன் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Facebook Comments Box