இந்தியர்களின் சுவிஸ் வங்கி முதலீடுகள் 3 மடங்காக உயர்வு: புதிய தகவல் வெளியீடு

சுவிட்சர்லாந்து, உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலா நாடாக இருந்தாலும், அதற்கேற்ப அவ்வணியின் வங்கிகளும் பணக்காரர்களிடையே பெரும் ஈர்ப்பை பெற்றுள்ளன. குறிப்பாக சுவிஸ் வங்கிகள், முதலீட்டாளர்களின் தகவல்களை வெளியிடாத பாதுகாப்பு பண்பால், செல்வவான்களின் விருப்பமான இடமாகத் திகழ்கின்றன. உலகின் எந்த பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும், அரசியல் நிலைமை சீரற்றிருந்தாலும், சுவிஸ் வங்கிகள் முதலீட்டுகளை பாதுகாப்பாக வைத்திருக்கின்றன.

இத்தகைய பாதுகாப்பு சூழ்நிலையால் அரசியல்வாதிகள், நடிகர்-நடிகைகள், தொழிலதிபர்கள், கோடீஸ்வர்கள் எனப் பலரும் சுவிஸ் வங்கிகளில் மாபெரும் தொகைகளை பதுக்கி வைக்கின்றனர். இந்தியாவிலும் பல பிரபலங்கள் மற்றும் செல்வந்தர்கள், வரி ஏய்ப்பு வழியாகப் பெற்ற கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கிகளில் வைத்திருக்கின்றனர் என நீண்டநாட்களாகவே குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.

அதற்கிடையில், சுவிஸ் தேசிய வங்கி சமீபத்தில் வெளியிட்ட வருடாந்த அறிக்கையில், 2024-ஆம் ஆண்டு இந்தியர்களின் முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியர்கள் சுமார் 3.5 பில்லியன் சுவிஸ் பிராங்குகளைச் (சுமார் ₹37,600 கோடி) சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ளனர். இது 2021-ம் ஆண்டு பின்னர் காணப்படும் மிகப்பெரிய முதலீடாகும். எனினும், அந்த தொகையில், தனிநபர்களின் நேரடி வைப்புத் தொகை மட்டும் ₹3,675 கோடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள், சட்டவிரோதமாகப் பெற்ற கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கிகளில் வைத்திருக்கின்றனர் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து எழும் போதிலும், அந்த பணம் முழுவதுமாகக் கறுப்புப் பணம் அல்ல என்று வங்கி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. மேலும், வரி ஏய்ப்புக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தனது முழுமையான ஆதரவை அளிப்பதாகவும் கூறியுள்ளது.

இத்துடன், இந்தியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையே 2018-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள், அவர்களது டெபாசிட் விவரங்கள் ஆகியவை இந்திய அரசுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

Facebook Comments Box