கர்நாடகாவில் போலிச் செய்தி பரப்புதல்: 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டம் திட்டம்

கர்நாடக மாநில அரசு, சமூக வலைதளங்களில் போலி மற்றும் தவறான தகவல்களை பரப்புவதை தடுக்கும் வகையில், புதிய கடும் சட்டத்தை கொண்டு வர முடிவுசெய்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ், இத்தகைய தவறுகளுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட தவறான தகவல்களால் பல மோதல்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக 10-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும், கோடிக்கணக்கில் சொத்து சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மாநில அரசு தனி சட்டம் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

மேலும், சமூக வலைதளங்களில் மதத்தை ஏசி அவதூறு தகவல்களையும், பெண்களை குறித்த தவறான செய்திகளையும் தடுக்க, “சமூக வலைதள ஒழுங்குமுறை ஆணையம்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்காக 6 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டது. இந்த குழு நிபுணர்களுடன் ஆலோசித்து சட்ட மசோதா தயாரித்துள்ளது.

“கர்நாடக தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகள் தடை மசோதா” என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த மசோதா, சட்டத்துறை அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களில் போலி செய்திகளை பரப்பும் நபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. தவறான கருத்துகள் பகிர்வோருக்கு 2 முதல் 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றங்கள் ஜாமீனில் விடுவிக்க முடியாத வகையில் கடுமையாக கருதப்படும் என்றும், இவை தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மசோதா விரைவில் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை ஒப்புதல் பெற்றவுடன், சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

Facebook Comments Box