ட்ரம்பின் தடையை தகர்த்து அதிகரித்து வரும் இந்திய ஐபோன் ஏற்றுமதி

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடாது என கடுமையாக அறிவுறுத்தியிருந்தாலும், இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி தொடர்ந்து உயர்வை பதிவுசெய்து வருகிறது. ஆப்பிளின் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்த ஐபோன்கள் 2.04 கோடியை கடந்துள்ளன. இந்த எண்ணிக்கை 2025 ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களுக்கு உட்பட்டது.

2024 இதே காலத்துடன் ஒப்பிட்டால், 2025-இல் ஐபோன் ஏற்றுமதி 57% அதிகரித்துள்ளது என சர்வதேச ஆய்வு நிறுவனம் கேனலிஸ் (ஓம்டியா) தெரிவித்துள்ளது.

இந்த ஐந்து மாதங்களில் ஏற்றுமதியான ஐபோன்களில் 77% அமெரிக்காவுக்கே சென்றுள்ளன. 2024-இல் இது 54% ஆக இருந்தது. எனவே, அமெரிக்கா மட்டும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 23% அதிக ஏற்றுமதியை பெற்றுள்ளது. குறிப்பாக, மே மாதத்தில் மட்டும் அமெரிக்காவின் பங்கு 89% ஆக இருந்தது.

இந்த நிலைமை பிற நாடுகளுக்கான ஏற்றுமதியை பாதித்துள்ளது. நெதர்லாந்து, செக் குடியரசு, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்ந்து குறைந்து வருகிறது. அமெரிக்கா–சீனா வரித்தகராறுகள் காரணமாக சீனாவுக்கான ஏற்றுமதி 2024 ஏப்ரலில் வெறும் 9 லட்சமாக சரிந்தது.

2024 ஏப்ரலில் 37 லட்சம் ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், திடீரென குறைவடைந்து அமெரிக்காவில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை சமாளிக்க இந்தியா அதிக அளவில் ஐபோன் ஏற்றுமதி செய்தது.

இந்த உயரும் ஏற்றுமதிக்கு முக்கிய காரணமாக, டாடா நிறுவனம் ஒப்பந்த உற்பத்தி பணிகளை வேகமாக மேற்கொண்டதே காரணம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் பாக்ஸ்கான் தற்போது 52% பங்குடன் முதலிடத்தில் உள்ளது. டாடாவின் பங்கு 2024-இல் 13% இருந்தது; தற்போதைய நிலையில் அது 37% ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் உற்பத்தியை விரைவில் தொடங்க ஆப்பிள் நிறுவனத்துக்கு அழுத்தம் இருக்கிறது. எனினும், அங்கு உற்பத்தி செலவுகள் மற்றும் செயல்பாட்டு சவால்கள் காரணமாக அது சாதகமற்றது.

இந்தியாவின் உற்பத்தி வசதி, உள்நாட்டு சந்தை வளர்ச்சி, அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் புவியியல் அரசியல் நிலைத்தன்மை ஆகியவை, ஆப்பிளின் நீண்டகால வளர்ச்சி யோசனைகளுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பதாக கிரேஹவுண்ட் நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சித் விர் கேஜியா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here