ஈரானில் சிக்கிய பிற நாடுகளினரையும் இந்தியா மீட்டெடுக்கிறது

ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு “ஆபரேஷன் சிந்து” எனப்படும் மீட்பு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதன் கீழ், ஈரானின் மஷாத் நகரத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு, 290 இந்திய மாணவர்கள் சிறப்பு விமானத்தின் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டனர். அதன் பின், துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரத்திலிருந்து இன்னும் ஒரு சிறப்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்தடைந்தது. இதுவரை மொத்தம் 517 இந்தியர்கள் பாதுகாப்புடன் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இந்தியாவின் டெஹ்ரானிலுள்ள தூதரகம் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ சமூக ஊடக பதிவில், “நேபாளம் மற்றும் இலங்கையின் அரசுகளின் வேண்டுகோளை ஏற்று, அந்த நாடுகளைச் சேர்ந்த குடிமக்களையும் ஈரானில் இருந்து மீட்டு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவசர உதவிக்காக டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், நேபாளம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த குடிமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மற்றும் டெலிகிராம் தொடர்புகளை வெளியிட்டுள்ளது. தொடர்பு எண்கள்: +989010144557, +989128109115, +989128109109.

Facebook Comments Box