ஈரானில் சிக்கிய 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்; மேலும் 800 பேர் வர விருப்பம்

ஈரானில் சிக்கிய 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்; மேலும் 800 பேர் வர விருப்பம் தெரிவித்துள்ளனர்

இஸ்ரேலும் ஈரானும் இடையே கடந்த ஒருவாரமாக நீடித்து வரும் யுத்த சூழலால், ஈரானில் தங்கியிருந்த இந்தியர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக இந்திய அரசு “ஆபரேஷன் சிந்து” என்ற திட்டத்தின் கீழ் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தற்போது வரை நான்கு தனி விமானங்களில் மாணவர்கள் உள்பட 1,100 இந்தியர்கள் தாயகம் வந்தடைந்துள்ளனர். நேற்று மாலை, 300-க்கும் மேற்பட்டவர்களுடன் ஐந்தாவது விமானம் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதன் மூலம், மீட்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தம் 1,428 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 800 பேர் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களை நாடு திரும்பச் செய்ய இன்றும் நாளையும் ஏற்பாடுகள் நடைபெறுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதோடு, நேபாளம் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களையும் தேவையான உதவியுடன் வெளியேற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

டெஹ்ரானில் சிக்கியிருந்த இந்தியர்கள் முதலில் 150 கி.மீ. தொலைவில் உள்ள குவாம் நகரம் வரை தரைபாதையில் அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள மஷாத் நகரம் கொண்டு செல்லப்பட்டு, விமானமூலம் தாயகம் வந்தடைந்தனர். போர் காரணமாக ஈரான் தற்காலிகமாக வான்வழியை மூடியிருந்தாலும், இந்தியர்களை வெளியேற்ற சிறிது நேரம் அது திறக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் டெல்லி வந்தடைந்த மிஸ்பா என்றவர், “ஈரானில் பல இடங்களில் சடலங்களை பார்த்தோம். வெடிப்பு சத்தங்களும், வான்வழி தாக்குதல்களும் நம்மை அச்சத்தில் ஆழ்த்தின. ஆனால் இப்போது நாங்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு வந்துவிட்டோம்” என்றார்.

அதேபோல், காஷ்மீரைச் சேர்ந்த மாணவி சுமரா ரஹ்மான், “போர் காரணமாக நாங்கள் மிகவும் பயந்த நிலையில் இருந்தோம். இரவுகள் சைரன்கள் மற்றும் வெடிப்புகளால் பரபரப்பாக இருந்தன. இப்போது நாங்கள் வீட்டில் இருக்கிறோம். இறைவன் விரும்பினால், மீண்டும் பாதுகாப்பாக அந்த நாட்டுக்குச் சென்று படிப்பை முடிக்க ஆசைப்படுகிறோம்” எனக் கூறினார்.

Facebook Comments Box