தெலங்கானாவில் இளம்பெண் தண்டவாளத்தில் காரை ஓட்டியது; ரயில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிப்பு
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில், தண்டவாளம் வழியாக காரை ஓட்டிச் சென்ற இளம்பெண் ஒருவர் காரணமாக, ரயில் போக்குவரத்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது.
நாகுலப்பள்ளி மற்றும் சங்கர்பள்ளி இடையே, இளம்பெண் ஒருவர் தனது காரை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் தண்டவாளத்தில் செலுத்தியதாக தெரியவந்தது. இந்தச் சம்பவம் காரணமாக அந்த வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன.
நாகுலப்பள்ளி அருகே காரை தண்டவாளத்தில் ஓட்டிக் கொண்டிருந்த அந்த பெண்ணைப் பார்த்த பொதுமக்கள், அவரை நிறுத்த முயன்றதாகவும், அந்த நேரத்தில் பெண் கத்தியை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அந்த பெண்ணை கைது செய்தனர். விசாரணையில், அவர் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவரும், ஹைதராபாதில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்தவரும், சமீபத்தில் வேலை இழந்தவரும் என்பதும் தெரியவந்தது.
மேலும், அவர் போதைப்பொருள் அல்லது மனநல பிரச்சனை காரணமாக இந்த செயலை செய்தாரா என்பதை உறுதி செய்ய, செவெல்லா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.