நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்தி மொழியை பேசுகிறார்கள் என்பதால், அதை முழுமையாக புறக்கணிக்க இயலாது. எனினும், 5-ம் வகுப்பு முடிந்த பிறகு மாணவர்கள் விரும்பினால் அந்த மொழியை கற்பிக்கலாம் என்று மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில், பாஜகவின் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி அரசு, அரசு பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரையிலும் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக கற்பிக்க உத்தரவிட்டுள்ளது. இது புதிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆகும். இதற்கு பலவிதமான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், அந்த மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மராத்தி மொழி மட்டுமே கட்டாயமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஆயினும், அரசு பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் முடிவு, மாநிலத்தில் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மத்திய முன்னாள் அமைச்சர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் குழு) தலைவரான சரத் பவார் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது:

“தொடக்க நிலை வகுப்புகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படக் கூடாது என்பதே என் நிலைப்பாடு. 5-ம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் இந்தி கற்றுக்கொள்வதில் இடையூறு இல்லை, ஏனெனில் நாடு முழுவதும் இந்தி பேசுபவர்கள் அதிகம். எனவே, இந்தி மொழியை முற்றிலுமாக தவிர்க்கத் தேவையில்லை.

மாணவர்கள் குறைந்த வயதில் இருக்கும்போது, அவர்களிடம் பல மொழிகளை கற்பது சிரமமாக இருக்கலாம். இது தாய்மொழியின் முக்கியத்துவத்தை குறைக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். எனவே, 5-ம் வகுப்பு வரையிலும் இந்தி மொழியை கட்டாயமாக்கும் அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும். தாய்மொழியே முதன்மையாக இருக்க வேண்டும். 5-ம் வகுப்புக்குப் பிறகு மாணவர் மற்றும் அவரது பெற்றோர் விருப்பப்பட்டால், மற்ற மொழிகளை கற்கலாம். அதற்கு எங்களிடம் எந்தத் தடையும் இல்லை” என அவர் தெரிவித்தார்.

Facebook Comments Box