வடஇந்திய மாநிலங்களில் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், விபத்துகள் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தின் மணாலி, ஜீவா நல்லா, ஷிலாகர், ஸ்ட்ரோ, ஹோரன்கர் உள்ளிட்ட இடங்களில் நேற்று மேகவெடிப்பு நிகழ்ந்தது. இதன் விளைவாக, அந்தப் பகுதிகளின் நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இமாச்சலத்தின் தரம்சாலா அருகே உள்ள கன்னியாரா கிராமத்தில் நீர்மின் நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அங்கு பணியில் இருந்த சுமார் 20 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 16 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இமாச்சல பிரதேசத்தின் பல சுற்றுலா பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. சிக்கியுள்ள 2,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உத்தராகண்டில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் மலைச் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், பத்ரிநாத் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த 20 பக்தர்கள் பயணித்த பேருந்து, கோல்திர் பகுதியில் லாரியுடன் மோதியதில் அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். 9 பேர் இதுவரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மழை மற்றும் வெள்ளத்தால் உத்தராகண்டின் கேதார்நாத் பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் சுமார் 1,300 சுற்றுலா பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி, பூஞ்ச், தோடா பகுதிகளில் நேற்று மேகவெடிப்புக்கு பின் கனமழை பெய்தது. காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 7 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர், 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவினால், ஜம்முவில் அமைந்த வைஷ்ணவி தேவி கோயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மும்பை – அகமதாபாத் நெடுஞ்சாலையில் கடும் மழை காரணமாக போக்குவரத்து முடங்கியது. இருபுறமும் நீண்ட வாகன நெரிசல் ஏற்பட்டது. குஜராத்தின் அகமதாபாத் மற்றும் சூரத் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.