ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 4,400-க்கும் அதிகமான இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்பு – வெளியுறவு அமைச்சகம் தகவல்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே உருவான போர்முனை சூழ்நிலையைத் தொடர்ந்து, அந்நாடுகளில் வசித்து வந்த இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு கடந்த ஜூன் 18ஆம் தேதி “ஆபரேஷன் சிந்து” எனும் சிறப்பு நடவடிக்கையை தொடங்கியது. இதன் கீழ் இதுவரை 19 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு, 4,400-க்கும் மேற்பட்ட இந்தியர் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானில் இருந்து புறப்பட்டு, ஆர்மீனியாவின் யெரெவான் நகரத்தை சென்றடைந்த 173 இந்தியர்களைக் கொண்ட குழு, பின்னர் விமானம் மூலம் ஜூன் 26ஆம் தேதி இரவு டெல்லிக்கு வந்தடைந்ததையும் வெளியுறவு அமைச்சகம் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்தது.
இது தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
“ஆபரேஷன் சிந்துவின் ஒரு பகுதியாக 19 சிறப்பு விமானங்கள் – அதில் 3 இந்திய விமானப்படை விமானங்கள் உள்ளன – மூலம் மொத்தம் 4,415 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3,597 பேர் ஈரானில் இருந்தும், 818 பேர் இஸ்ரேலில் இருந்தும் மீட்கப்பட்டனர். அதற்கு மேலாக, 9 நேபாள நாட்டு குடிமக்கள், 4 இலங்கை பிரஜைகள் மற்றும் ஒரு இந்தியாவின் ஈரானிய மனைவியும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மொத்தம் 14 விமானங்கள் ஈரானில் இருந்து இயக்கப்பட்டன. அவை மஷாத், யெரெவான் (ஆர்மீனியா) மற்றும் அஷ்காபாத் (துர்க்மெனிஸ்தான்) ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்டன. இந்த நடவடிக்கையில் எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளின் ஆதரவைப் பெற்றோம். இஸ்ரேல், ஜோர்டான் மற்றும் எகிப்தில் உள்ள இந்திய தூதரகங்கள் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றின.
ஈரான் அரசு இந்தியர்களை வெளியேற்றுவதற்காக தனது வான்வெளியை திறந்ததற்காக நன்றி தெரிவித்தோம். துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆர்மீனியா அரசுகளும் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கின. மத்திய அரசு ஈரான் மற்றும் இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறது. எதிர்கால நடவடிக்கைகள் அவற்றின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும்” என அவர் கூறினார்.