வங்கதேசத்துடனான கங்கை நீர் பகிர்வை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை

வங்கதேசத்துடனான கங்கை நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை திருத்துவது குறித்து மத்திய அரசு சிந்தனை மேற்கொண்டு வருகிறது.

கடந்த காலங்களில் இந்தியா – பாகிஸ்தான் இடையே சிந்து நதிநீர் பகிர்வு தொடர்பான ஒப்பந்தம் காணப்பட்டது. பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக பதிலடி நடவடிக்கையாக மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நிறுத்துவதாக அறிவித்தது. இதனால் பாகிஸ்தானில் வறட்சி நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி அமைப்பானது வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்தியா, 1996-ஆம் ஆண்டு வங்கதேசத்துடன் கங்கை நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கொல்கத்தா துறைமுக போக்குவரத்து சீரமைப்புக்காக 1975-ஆம் ஆண்டு ஃபராக்கா பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு, கங்கை நதிநீர் ஹூக்ளி ஆற்றுக்கு திருப்பப்பட்டது. இதனால் வங்கதேசத்தில் வறட்சி ஏற்பட்டது.

இந்த பிரச்சனைக்கு தீர்வாக, இரு நாடுகளும் கங்கை நீரை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தை மேற்கொண்டன. வங்கதேச எல்லைக்கு 10 கி.மீ அருகில் பகீரதி ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணையின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 11 முதல் மே 11 வரை, ஒவ்வொரு 10 நாட்களுக்கு 35,000 கன அடி நீர் மாறி மாறி பகிரப்படுகிறது.

தற்போது, இந்தியாவின் நீர் தேவைகள் அதிகரித்துள்ள நிலையில், கூடுதலாக 30,000 முதல் 35,000 கன அடி நீர் தேவைப்படுகிறது. இந்தியா – வங்கதேசம் இடையிலான 30 ஆண்டுகளுக்கான நீர்ப்பகிர்வு ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. ஒப்பந்தத்தை நீட்டிக்க இருதரப்புகளின் சம்மதம் அவசியம். ஆனால், வங்கதேசத்தின் நடத்தை இந்தியாவுக்கு விரோதமாக இருப்பதால், மத்திய அரசு அந்த நீர்ப்பகிர்வு ஒப்பந்தத்தில் மாற்றங்களை செய்யும் திட்டத்தை பரிசீலித்து வருகிறது.

Facebook Comments Box