அரசியல் சாசனத்தின் முகவுரை மாற்றத்துக்கு உரியதல்ல என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார். இருப்பினும், அவசரநிலை காலத்தில் அதில் மாற்றம் செய்யப்பட்டது என்றும் அவர் நினைவூட்டினார்.

கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் மாநில சட்டமன்றத்தின் முன்னாள் மேலவை உறுப்பினர் டி.எஸ். வீரய்யா தொகுத்த ‘அம்பேத்கரின் செய்திகள்’ என்ற நூல் இன்று (ஜூன் 28) புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களால் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், “ஒரு அரசியலமைப்பின் முகவுரை அதன் ஆன்மா போன்றது. இந்திய அரசியலமைப்பின் முகவுரை தனித்துவமானது. உலகத்தில் இந்தியாவைத் தவிர மற்ற எந்த நாடுகளிலும் முகவுரை மாற்றப்படவில்லை. அது மாற்ற முடியாத ஒன்றாகும். அரசியலமைப்பின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது முகவருதான்” என்றார்.

அதே சமயம், 1976-ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் “சோசலிசம்” மற்றும் “மதச்சார்பற்ற” என்பன போன்ற புதிய சொற்கள் சேர்க்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இது நாட்டில் 1975 ஜூன் 25 அன்று தொடங்கிய 22 மாத அவசரநிலை காலத்திலேயே நடந்ததாக அவர் கூறினார்.

“அந்த அவசரநிலை, இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலமாக இருந்தது. மக்கள் அடிப்படை உரிமைகளை இழந்தனர். அப்போது அரசியலமைப்பின் ஆன்மாவே பாதிக்கப்பட்டது. முகவுரையில் செய்யப்பட்ட மாற்றம், அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை குறைக்கும் செயலாகும்” என அவர் விமர்சித்தார்.

அத்துடன், “டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மிகுந்த உழைப்பால் அரசியலமைப்பை வடிவமைத்தார். அவர் இவ்வாறான மாற்றங்களை உறுதியாக சிந்தித்திருப்பார். இந்தியா ஒருமுறை தனது சுதந்திரத்தை இழந்த அனுபவம் கொண்டது. அது மீண்டும் நடக்கக்கூடாது. நமது சுதந்திரம் மீண்டும் ஆபத்தில் சிக்காத வகையில் நாம் அதனை உறுதியாக பாதுகாக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

Facebook Comments Box