தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள சிகாச்சி என்ற இரசாயன ஆலையில் இருக்கும் ஒரு ரியாக்டர், நேற்று முன்தினம் திடீரென வெடித்ததில் பரிதாபகரமான விபத்து ஏற்பட்டது.
இந்த அனர்த்தத்தில், சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் கடும் காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை சிகாச்சி ஆலையின் துணைத் தலைவர் எல்.எஸ் கோஹனையும் சேர்த்து, மொத்தம் 36 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னணியில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் வழங்கப்படும். காயமடைந்தவர்கள் சிறந்த சிகிச்சை பெற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது மிகவும் கவலையளிக்கும் சம்பவம். பல உயிர்கள் சேதமானது மிகவும் வருத்தமான விஷயம்,” என தெரிவித்தார்.
முதல்வர் அறிவித்த நிவாரணம்:
- உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உடனடி ரூ.1 லட்சம் மற்றும் மேலும் ரூ.1 கோடி வழங்கப்படும்.
- சிகிச்சை பெறும் போது உறுப்புகள் இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம்.
- சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம்.
- உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை அரசு ஏற்கும்.
விபத்து நேரத்தில் 143 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகவும், இதில் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் இன்னும் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத நிலையில் உள்ளதால், டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளம் தம்பதியின் மரணம்:
ஆந்திராவின் கடப்பா மாவட்டம், ஜம்மலமடுகு பகுதியில் வசிக்கும் நிகில் ரெட்டியும் ரம்யாவும் ஒருவரை ஒருவர் காதலித்து, குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்துக்குப் பிறகு, இருவரும் சிகாச்சி ஆலையில் வேலைக்கு சேர்ந்தனர். ஆனால், வெடி விபத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களுக்காக குடும்பத்தினர் திருமண வரவேற்பு விழாவை திட்டமிட்டிருந்த நிலையில், இந்தச் சோகம் நிகழ்ந்தது.