மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை உருவாக்கியது பயனற்ற செயல் என முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இந்த சட்டங்கள் நீதிமன்றம், வழக்கறிஞர்கள் மற்றும் காவல் துறையினரிடம் நியாய நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பதிவில், “இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நடந்த மிகப் பெரிய சட்ட சீர்திருத்தங்களாகவே இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு விளக்கியுள்ளது. ஆனால், உண்மை அதற்கு முற்றிலும் முரணானதாக உள்ளது.

நாடாளுமன்ற நிலைக் குழுவினால் இந்த மசோதாக்கள் பரிசீலிக்கப்பட்டபோது, நான் என் எதிர்ப்பைக் குறிப்பாக சமர்ப்பித்தேன். அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

புதிய மசோதாக்களை, இந்திய குற்றவியல் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) மற்றும் இந்திய சாட்சியச் சட்டத்துடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தபின், நான் பின்வரும் முடிவுகளுக்கு வந்தேன்:

  1. இந்திய குற்றவியல் சட்டத்தின் 90-95%
  2. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 95%
  3. சாட்சியச் சட்டத்தின் 99%

புதிய மசோதாக்களில் பழையவற்றிலிருந்து நேரடியாக நகலெடுக்கப்பட்டதாகவே இருக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டை யாரும் மறுக்கவில்லை, எங்கும் எதிர்ப்பும் வைக்கப்படவில்லை.

புதிய சட்டங்கள் பெரும்பாலும் பழையவற்றை மாற்றமின்றி “வெட்டி ஒட்டிய” வடிவமாக உள்ளன. சில புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன, அவை சில நேரங்களில் ஏற்கத்தக்கவையாகவும் சில சமயங்களில் பொருத்தமற்றவையாகவும் உள்ளன.

இதனைச் செயல்படுத்திய முறை முழுவதும் பயனின்றி உள்ளது. இவை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல் துறையினரிடையே குழப்பத்தை உருவாக்குகின்றன,” என்றார் ப.சிதம்பரம்.

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்த மூன்று புதிய சட்டங்கள் சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய சட்ட சீர்திருத்தங்கள். இவை நீதித்துறையின் செயல்முறைகளை எளிமைப்படுத்தி, பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாகவும், நேரத் திட்டமிடலுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டவை,” எனக் கூறியிருந்தார்.

குறிப்பாக, இந்தியாவில் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த இந்திய குற்றவியல் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), மற்றும் இந்திய சாட்சியச் சட்டங்களை மாற்றி, புதிய சட்டங்களான பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா (BNSS) மற்றும் பாரதிய சாக்ஷய ஆதினியம் (BSA) 2024 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box