இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையும் நிலச்சரிவும்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வரை 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேகவெடிப்பு காரணமாக கடந்த 10 நாட்களாக பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு மக்கள் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
சிம்லா நகரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரின் ஊடக ஆலோசகர் நரேஷ் சவுகான், “கனமழை மற்றும் மேகவெடிப்பு காரணமாக 63 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் இன்னும் காணவில்லை,” என்று கூறினார்.
இத்தகைய இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள மாநில மக்கள் தொகையில் குறைந்தது 1% பேர் சிவில் பாதுகாப்புப் பயிற்சி பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் ஜூலை 8-ம் தேதி வரை கனமழை தொடரும் எனத் தெரிவித்துள்ளது. இதற்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மண்டி மாவட்டத்தில் பியாஸ் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் கனமழை பாதிப்பு காணப்படுகிறது. பேரிடர் மேலாண்மை துறை நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறது.