2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரமான தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக, முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் தஹாவூர் ஹுசைன் ராணா தற்போது இந்திய விசாரணை அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளார். இந்தப் பயங்கரச் சம்பவத்தை ஒருங்கிணைத்தவர்கள் யார் என்ற கோணத்தில் நடைபெறும் விசாரணையின் போது, தஹாவூர் ராணா தாக்குதல் நடந்த நேரத்தில் மும்பையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர் தேசிய புலனாய்வு முகமை (NIA) பாதுகாப்பில், டெல்லியின் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மீது விசாரணை நடத்த மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகள் அண்மையில் சென்றிருந்தனர். அப்போது நடந்த விசாரணையின் போது, தானும், தனது நண்பரான டேவிட் ஹெட்லிக்கும், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினர் பல்வேறு பயிற்சிகளை அளித்ததாக தஹாவூர் ராணா ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு ஒரு உளவுத்துறையைப் போன்று செயல்படுவதாகவும், மும்பையில் ஒரு இமிகிரேஷன் மையம் அமைக்கும் யோசனை தன்னுடையது என்றும், 26/11 தாக்குதலின் திட்டங்களை கண்காணிக்கத்தக்க வகையில் தான் மும்பையில் இருந்ததாகவும், தாக்குதல் நடத்தப்பட்ட முக்கிய இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளதாக அதிகாரப்பூர்வ விசாரணைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தஹாவூர் ராணா, வயது 64, 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானைச் சேர்ந்த இவர், இந்தியாவிற்கு விசாரணைக்காக ஒப்படைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்தது. அந்தக் கோரிக்கையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஏற்று, இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. அதன் பேரில், கடந்த ஏப்ரல் மாதத்தில் அவர் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார். தற்போது, தேசிய புலனாய்வு முகமை (NIA) உள்ளிட்ட முக்கிய விசாரணை அமைப்புகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.