திருவனந்தபுரம் அருகே 18 அடி நீள ராஜநாகத்தை பெண் வனத்துறை அதிகாரி சிறப்பாக கைப்பற்றி அப்புறப்படுத்திய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு அருகிலுள்ள பெப்பரா மற்றும் அஞ்சுமருதுமூட்டு பகுதிகளில் மக்கள் வசிக்கும் இடங்களை ஒட்டியிருக்கும் ஓர் நீரோடையில், 18 அடி நீளமுள்ள ஓர் அபாயகரமான ராஜநாகம் (கிங் கோப்ரா) காணப்பட்டது.
அந்த இடத்தில் உள்ள பொதுமக்கள் நீரோடையில் குளிக்கச் சென்றபோது, அங்கு மிக நீளமான பாம்பு ஒன்று இருப்பதை கண்டு, உடனே வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து பருத்திப்பள்ளி வனச்சரகத்தைச் சேர்ந்த அதிகாரியான ஜி.எஸ். ரோஷிணி அந்த இடத்திற்கு விரைந்து வந்தார்.
அவர் மிகுந்த துணிச்சலுடனும், அனுபவத்துடனும் ஒரு சிறிய குச்சியின் உதவியுடன் அந்த ராஜநாகத்தை கட்டுப்படுத்தி, அதை பாதுகாப்பாக ஒரு துணிப் பையில் அடைத்து அப்புறப்படுத்தினார்.
பாதுகாப்பு உபகரணங்களின்றி, மிகுந்த கவனத்துடனும், சுறுசுறுப்பாகவும் அந்த விஷப்பாம்பை கையாளும் அவரது செயல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனைப்பற்றிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதிக விஷம் கொண்டது என்றும் மிகவும் அபூர்வமாகக் காணப்படும் வகையாக இருக்கின்ற இந்த ராஜநாகத்தை தனது முயற்சியினால் பிடித்த ரோஷிணிக்கு பலரின் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ரோஷிணி கடந்த 8 ஆண்டுகளாக வனத்துறையில் பணியாற்றி வருகிறார். இந்த காலப்பகுதியில் 800-க்கும் அதிகமான பாம்புகளை பாதுகாப்பாக பிடித்து இடமாற்றம் செய்த அனுபவம் அவருக்கு உள்ளது. எனினும், இவ்வளவு பெரிய ராஜநாகத்தை இது முதல் முறையாகத் தான் நேரில் பிடிக்கிறேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.