பிஹாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை இடைநிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. ஆனால், இந்த விவகாரத்தை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு விரைவில் விசாரிக்க ஒப்புக் கொண்டது.

தகுதி உள்ள குடிமக்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்றும், தகுதியற்றவர்கள் நீக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளோடு, தேர்தல் ஆணையம் கடந்த ஜூன் 24-ம் தேதி முதல் பிஹாரில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 2003-ம் ஆண்டுக்குப் பிறகு வாக்களிப்பதற்காகப் பதிவு செய்தவர்கள் இந்தியக் குடிமக்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக, பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்ற கூடுதல் ஆவணங்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய நடைமுறைக்கு, காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியும், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. இதனையடுத்து, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சுதான்சு துலியா மற்றும் ஜாய் மல்யா பாக்சி அடங்கிய அமர்வு நேற்று விசாரணை மேற்கொண்டது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதாடினார்கள்.

அவர்கள், “இந்த திருத்த நடவடிக்கையின் மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரே அதிகம் பாதிக்கப்படுவர்” என்றே வலியுறுத்தினர்.

இந்த சூழ்நிலையில், அவசர விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்று, ஜூலை 10-ம் தேதி வியாழக்கிழமையன்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.

எனினும், அந்த நாள் வரை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Facebook Comments Box