நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம்: மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு!

மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பானது, இன்று தேசிய அளவில் ஒரு மிகப்பெரிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வங்கிகள், அஞ்சல், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கியமான துறைகளின் பணிச்சூழல் சீர்கேடடுபட்டு சேவைகள் முடங்க வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

அரசு கொள்கைகள் குறித்து தொழிற்சங்கங்களின் குற்றச்சாட்டு

மத்திய அரசு தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிரான கொள்கைகளை பின்பற்றுவதாகவும், பெரும் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் மத்திய தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. இந்த நியாயமற்ற அணுகுமுறைக்கு எதிராகவே, 10 முக்கிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினால் இந்த வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய கோரிக்கைகள் என்ன?

மத்திய தொழிலாளர் அமைச்சராக உள்ள மன்சுக் மாண்டவியாவிடம் 17 அம்ச கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்திருந்தனர். ஆனால், இந்த கோரிக்கைகளுக்கு எந்தவிதமான உறுதியான பதிலும் அரசிடம் இருந்து கிடைக்கவில்லையெனவும், கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறை கூட தொழிலாளர் மாநாடு நடத்தப்படவில்லையெனவும் அவர்கள் கூறுகின்றனர். மாறாக, தொழிற்சங்க செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசின் நடவடிக்கைகள் அமைகின்றன என்று குற்றம் சுமத்தியுள்ளனர்.

மாநில மற்றும் மத்திய நிறுவனங்கள் பாதிக்கப்படலாம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள், ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்புகள் மற்றும் தற்காலிக நியமனங்கள் அதிகரித்திருப்பது, தொழிலாளர் உரிமைகளை கட்டுப்படுத்தும் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பது ஆகியவை தொழிற்சங்கங்களை கடும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளன.

வேலையின்மையை சமாளிக்க காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தில் நாள்கள் மற்றும் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும், நகர்ப்புறத்துக்கும் இத்திட்டம் விரிவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அரசாங்கம் மாற்றாக, தொழிலாளர் நலனை இல்லாமல் ELi (Employment Linked Incentive) திட்டத்தை மட்டும் ஊக்குவித்து வருகிறது.

இளம் தொழிலாளர்களுக்கு பின்னடைவு

அரசுத் துறைகளில் ஓய்வு பெற்றோர் மறுநியமனம் செய்யப்படுவதால், புதிய இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ரயில்வே, எஃகு, கல்வித் துறைகள், தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட பல துறைகளில் இந்நிலை அதிகம் காணப்படுகிறது. இந்நிலையில், 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களில் வேலையின்மை அதிகரிக்கிறது.

விசாலமான ஆதரவு மற்றும் எதிர்பார்ப்புகள்

வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற தொழிற்சங்கங்கள் தீவிரமான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. ஆதரவாளர்களின் ஒத்துழைப்பையும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முக்கிய தலைவர்கள் கருத்து

அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் நிர்வாகி அமர்ஜீத் கவுர் தெரிவித்ததாவது: “இந்த வேலைநிறுத்தத்தில் 25 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். விவசாயிகள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களும் இதில் இணைகின்றனர்” என்றார்.

இந்து மஸ்தூர் சபா நிர்வாகி ஹர்பஜன் சிங் சித்து கூறும்போது: “வேலைநிறுத்தம் காரணமாக வங்கி, அஞ்சல், நிலக்கரி சுரங்கம், தொழிற்சாலைகள் மற்றும் மாநில போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படலாம்” என்றார்.

தொழிலாளர்களின் சங்கங்கள் – முழுமையான ஒத்துழைப்பு

பல்வேறு மாநில அரசுத் துறைகள், எஃகு, கனிமங்கள், மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதற்கான அறிவிப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளன. விவசாய தொழிலாளர் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’வும் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவை அறிவித்துள்ளது.

முன்னைய போராட்டங்களின் தொடர்ச்சி

2020 நவம்பர் 26ம் தேதி, 2022 மார்ச் 28-29ம் தேதிகள் மற்றும் 2023 பிப்ரவரி 16ம் தேதி ஆகிய காலங்களில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட தொழிற்சங்க வேலைநிறுத்தங்களின் தொடர்ச்சியாக, இந்தப் போராட்டமும் அமைந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box