கேரளாவில் உள்ள 2 என்சிபி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: அஜித் பவார் அணியிலிருந்து கடிதம்
கேரள மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அஜித் பவார் அணியின் தேசிய செயல் தலைவர் பிரபுல் படேல் எழுத்து மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது, கேரள வனத்துறை அமைச்சராகப் பணியாற்றும் ஏ.கே. சசீந்திரனும், மாநில என்சிபி தலைவர் தாமஸ் கே. தாமஸும், இருவரும் சரத் பவார் தலைமையிலான என்சிபியில் செயல்பட்டு வருகின்றனர். இந்தக் கட்சி, கேரள அரசின் இடது முன்னணியில் அங்கம் வகித்து வருகிறது.
இந்த நிலையில், ‘கடிகாரம்’ சின்னத்தில் போட்டியிட்டு 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு எம்எல்ஏக்களும், தற்போது அஜித் பவார் தலைமையிலான கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் செயல்படுவதாக கூறி, பிரபுல் படேல் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், தாமஸ் மீது கட்சிவிரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டும், அவர் என்சிபியில் இருந்து ஆறு ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் ஒரு வாரத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும், இல்லையெனில் அவரின் தகுதி நீக்கத்திற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இதே மாதிரியான கடிதம் ஏ.கே. சசீந்திரனுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்த தாமஸ்,
“கேரள மாநில என்சிபி தொடக்கம் முதல் சரத் பவார் தலைமையில் செயல்பட்டு வருகிறது. பிரபுல் படேல் அணியுடன் எங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. எனவே, அவர்களின் கடிதத்தை எங்களால் எதுவும் பரிசீலிக்க முடியாது” என்றார்.
அதேபோல் வனத்துறை அமைச்சர் சசீந்திரனும்,
“படேல் அனுப்பிய கடிதம் எங்களுக்கு கவலைக்குரியதல்ல. நாங்கள் கட்சி விதிகளுக்குட்பட்டு செயல் படுகிறோம். கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் தொடர்பான முடிவை சட்டமன்ற சபாநாயகர் தான் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.