Bihar SIR | தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல INDIA கூட்டணியின் திட்டம்!
பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரச் சீரமைப்புக்கு எதிராக, தேர்தல் ஆணையம் தலைமையகம் நோக்கி பேரணி நடத்தும் வகையில் INDIA கூட்டணி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீரமைப்புக்கு தொடர்ந்து எதிர்வினை தெரிவித்து வருகிறது. மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடக்கம் முதல், இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று உறுதியோடு வலியுறுத்தி வருகிறது. நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியிலும் தொடர்ந்து எதிர்க்கட்சித் தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், INDIA கூட்டணியின் கோரிக்கைகளை பாஜக நிராகரித்து வருகிறது. இது தொடர்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
“வாக்காளர் பட்டியல் சிறப்பு சீரமைப்பு என்பது தேர்தல் ஆணையத்தின் வழமையான செயல்முறை. பல ஆண்டுகளாக இது நடைமுறையில் உள்ளது. இதற்கெதிரானவர்கள் அரசியல் நோக்கத்தோடு விமர்சனம் செய்கிறார்கள். அவர்களது சொந்த இலாபமே அதற்குப் பின்னணியாக உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
வாக்காளர் பட்டியல் சீரமைப்பை விவாதிக்க வேண்டும் என வலியுறுத்துவது, தேர்தல் ஆணையத்தை நேரடியாக கேள்வி எழுப்புவதைப் போன்றது. மக்களவையில் இத்தகைய விவாதம் நடத்தலாமா? அரசியலமைப்பை புரிந்து கொள்ளாதவர்களிடம் விவாதம் நடத்துவதில் அர்த்தமில்லை” என்றார்.
மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி கூறியதாவது:
“வாக்காளர் பட்டியல் சிறப்பு சீரமைப்பு இது முதன்முறையல்ல. 2003 மற்றும் அதற்கு முன்னும் இது நடந்து முடிந்துள்ளது. தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமாக இயங்கும் அமைப்பு. இத்தகைய திருத்தங்கள் அறிவியல் அடிப்படையில், தொழில்நுட்ப ஆதரவுடன் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் யாருக்காவது சிக்கல் இருந்தால், நேரடியாக தேர்தல் ஆணையத்தை அணுகலாம்” என்றார்.
இந்த சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று INDIA கூட்டணி கூட்டம் நடத்தியது. இதில், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸின் டெரெக் ஒ’பிராயன், திமுக தலைவர்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், என்சிபி (எஸ்.பி.) சார்பில் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அந்தக் கூட்டத்தில் நடந்த விவாதம் குறித்து தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீரமைப்பு குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதே INDIA கூட்டணியின் முக்கியக் கோரிக்கை. இந்தக் கோரிக்கையில் அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒருமித்தக் குரலுடன் உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஒருவர் இந்தியக் குடிமகனாக இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஜனநாயக விரோதமானது. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
இதையடுத்து, அடுத்த வாரம் தேர்தல் ஆணையத் தலைமையகம் நோக்கி INDIA கூட்டணியின் எம்பிக்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.