உ.பி. அரசு நிலத்தில் ரூ.250 மாத வாடகைக்கு செயல்பட்டு வந்த சமாஜ்வாதி கட்சி அலுவலகம்: காலி செய்ய உத்தரவு
உத்தரப்பிரதேசத்தின் முராதாபாத் மாவட்டத்தில் ரூ.250 மாத வாடகைக்கு செயல்பட்டு வந்த சமாஜ்வாதி கட்சி அலுவகத்தை அரசு காலி செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த அலுவகம் கடந்த 31 ஆண்டுகளாக கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் பெயரில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
முராதாபாத் மாவட்டத்தின் சிவிலைன்ஸ் பகுதியில் உள்ள இந்த அரசு கட்டிடம், 1994 ஜூலை 13ம் தேதி சமாஜ்வாதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது மாநிலத்தில் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசு இருந்தது. அதன் பின்னர், மாதம் ரூ.250 வாடகையில் அந்த கட்டிடம் கட்சி அலுவகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், முலாயம் சிங் யாதவ் கடந்த 2022 அக்டோபர் 10ம் தேதி மறைந்ததைத் தொடர்ந்து, அந்த சொத்தின் பெயரை மாற்றுவதற்கான விண்ணப்பம் சமாஜ்வாதி கட்சியால் செய்யப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நிலம் அரசு திட்டங்கள் மற்றும் அதிகாரிகள் வீட்டு வசதிக்காக தேவைப்படுவதால், அரசு சொத்துகளை பொது நலனுக்காக பயன்படுத்த வேண்டியதுதான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அலுவகத்தைக் காலி செய்து 30 நாட்களுக்குள் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலைக்கு உட்பட்ட கட்டிடத்தின் சந்தை மதிப்பு பல கோடிகளில் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் வாடகை இன்று வரை ரூ.250 ஆகவே இருந்து வருகிறது.
காலக்கெடுவில் கட்டிடத்தைக் காலி செய்யத் தவறினால், தினசரி ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால், சமாஜ்வாதி கட்சி தனது அலுவகத்தை இடமாற்றம் செய்யும் கட்டாயத்தில் சிக்கியுள்ளது. மேலும், உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களிலும் உள்ள சமாஜ்வாதி அலுவகங்களுக்கு அரசு நிலம் பயன்படுத்தப்படுகிறதா என்ற விசாரணையும் மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக ஏதேனும் முறைகேடு தெரிய வந்தால், கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மீதும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.