பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை: பாலியல் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு, சாகும் வரை சிறையில் அடைக்கப்படும் ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னாள் பிரதமர் ஐ.கே. தேவகவுடாவின் பேரனும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மஜத முன்னாள் எம்பியுமான 33 வயதான பிரஜ்வல் ரேவண்ணா, கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பெண்களுடன் இணைந்திருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி, நாட்டை திரும்பிப் பார்க்க வைத்த பெரும் சர்ச்சைக்குள்ளானவர்.

இதையடுத்து, மஜத கிராம பஞ்சாயத்து தலைவி, அவரது வீட்டு பணிப்பெண் உட்பட 4 பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், பிரஜ்வலுக்கு எதிராக 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட அவர், தற்போது பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விசாரணை அதிகாரிகள் 1,632 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். பின்னர், பெங்களூருவில் மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிபதி சந்தோஷ் கஜனன் பட், வழக்கில் அணைத்து சாட்சியங்களையும் பரிசீலித்த பின்னர், ஆகஸ்ட் 1ஆம் தேதி, “பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன” என கூறி, அவரை குற்றவாளி என அறிவித்தார். அதன்பின், இன்று (ஆகஸ்ட் 2) தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

நீதிபதி தனது தீர்ப்பில்,

“பிரஜ்வல் ரேவண்ணா, பாலியல் வன்கொடுமை குற்றத்தில் நிச்சயமாக குற்றவாளி. அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது” என கூறினார்.

குறைவான தண்டனை வழங்க கோரிய பிரஜ்வல் ரேவண்ணா:

தண்டனை விதிப்பதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான பிரஜ்வல்,

“என் மீது பல பெண்களை வன்கொடுமை செய்ததாகக் கூறுகிறார்கள். ஆனால் ஒருவரும் தானாக முன்வந்து புகார் அளிக்கவில்லை. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு இவை நடந்தது. அரசே திட்டமிட்டு புகார்களை ஏற்படுத்தியது.

நான் 6 மாதங்களாக என் பெற்றோரைப் பார்க்கவில்லை. எனக்கு குடும்பம் இருக்கிறது. தயவுசெய்து குறைவான தண்டனை வழங்குங்கள். அரசியலில் விரைவாக வளர்ந்ததே என் வாழ்க்கையின் ஒரே தவறு” என மனமுரிந்து நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

ஆனால், நீதிமன்றம் அதைக் கருத்தில் கொள்ளாமல், கடுமையான தண்டனையாக சாகும் வரை சிறை என அறிவித்து, வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பு, சட்டத்தின் முன் அனைவர் சமம் என்பதையும், பாலியல் குற்றங்களில் நீதிமன்றம் கண்டிப்பான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

Facebook Comments Box