குடியரசு துணைத் தலைவர் தேர்தலால் மீண்டும் தள்ளி வைக்கப்படும் பாஜக தேசிய தலைவர் தேர்தல்!

பாஜக கட்சியின் புதிய தேசியத் தலைவர் தேர்தல் மீண்டும் தாமதமாகிறது. இதற்குக் காரணமாக, செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் கூறப்படுகிறது.

பாஜக தேசியத் தலைவராக தற்போது மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பதவியில் உள்ளார். அவருடைய பதவிக்காலம் முடிந்த பிறகும், 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அவரது பதவிக்காலம் முதல்முறையாக நீடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்ற காரணத்தால் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டது. அதேவேளை, அமைப்புத் தேர்தல்கள் முடிவடையாத நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாத சூழ்நிலை உருவானது.

அந்த அமைப்புத் தேர்தல் பணிகள் சமீபத்தில் முடிவடைந்ததையடுத்து, தற்போது தேசிய தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவான நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய நாளிலேயே மாநிலங்களவை தலைவராகவும், குடியரசுத் துணைத் தலைவராகவும் இருந்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த நிகழ்வு இப்பொழுது புதிய தலைவரை தேர்வு செய்யும் முயற்சியைத் தள்ளி வைத்திருக்கிறது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9 அன்று நடைபெறும் என அறிவித்துள்ளது. பாஜக வட்டாரத் தகவலின்படி, இந்த தேர்தல் நடைபெறும் வரை பாஜக கட்சி தனது தேசிய தலைவர் தேர்வை இடைநிறுத்தியுள்ளது.

இந்நிலையில், பாஜக புதிய தேசியத் தலைவர் பதவிக்காக மத்திய அமைச்சர்களான தர்மேந்திர பிரதான் மற்றும் மனோகர் லால் கட்டார் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே சமயம், மாநிலங்களவையின் தலைவருக்கான வேட்பாளரை தேர்வு செய்வதே பாஜக தலைமைக்கு மிக முக்கியமான ஆக்கமாக உள்ளது. மாநிலங்களவையில் பாஜக 102 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையில் இருக்கிறது.

ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளையும் பொருத்துக் கொண்டு வேட்பாளரை தேர்வு செய்வது ஒரு சவாலாக உருவாகியுள்ளது. ஏனெனில், மாநிலங்களவையில் பல எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் உள்ளனர். அவர்களை சமாளித்து மாநிலங்களவையின் பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வது அரசின் முக்கிய தேவையாக உள்ளது.

அதற்குமேல், அக்டோபரில் பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்பின்னர் மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் தொடர இருக்கின்றன. இதற்கு மேலாக, 2027-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலும் வருகின்றது. அதற்குமுன் மத்திய அமைச்சரவையிலும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கலாம்.

இத்தனை அரசியல் நிகழ்வுகளும் வந்துவிடும் நிலையில், மிகச் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய ஒருவரை பாஜக புதிய தேசிய தலைவராக அமர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. மேலும், இப்பதவியில் அமரும் நபர், பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் இணக்கமாக செயல்பட வேண்டிய கட்டாயமும் உள்ளது. இதனை காரணமாகக் கொண்டு, ஏற்கனவே தாமதமான தேர்தல் மீண்டும் தள்ளிப் போகும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

Facebook Comments Box