ஜார்க்கண்டின் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் மரணம்
ஜார்க்கண்டின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் இணை நிறுவுபவருமான ஷிபு சோரன், டெல்லியில் உள்ள மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 4) காலமானார். அவருக்கு 81 வயதாகிறது.
இதுகுறித்து அவரது மகனும், தற்போதைய ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் தனது சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டுள்ள செய்தியில், “மிகுந்த மரியாதைக்குரிய குரு எங்களை விட்டுச் சென்றார். இன்று எனது வாழ்க்கையில் பெரும் வெற்றிடம் உருவாகியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவுநர்களில் ஒருவராகவும், 38 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்தவராகவும் விளங்கிய ஷிபு சோரன், மூன்று முறை ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். தற்போது, அவரது மகன் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவராக கருதப்பட்ட ஷிபு சோரன், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாத இறுதியில் டெல்லி ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ஒரு மாதத்துக்கும் மேல் தொடர்ச்சியான சிகிச்சையில் இருந்த அவருக்கு, சமீபகாலமாக மூச்சுவிடுவதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக செயற்கை சுவாச உதவி அளிக்கப்பட்டு வந்தது. சமீபத்திய ஆண்டுகளில் அவர் தீவிர அரசியலிலிருந்து விலகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.