அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு இந்தியாவில் குறைந்த அளவிலான தாக்கமே ஏற்படுத்தும்: பொருளாதார நிபுணர்கள் மதிப்பீடு

அமெரிக்கா, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 7ம் தேதி முதல் அமலில் வரும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஒரு ஆண்டுக்கு 8,650 கோடி டாலர் மதிப்புள்ள இந்தியப் பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன. இதில் அமெரிக்க வரிவிலக்கு சட்டத்தின் கீழ் சில வகை பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

மருந்துகள், எரிசக்தி தொடர்பான பொருட்கள், முக்கிய கனிமங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு இந்த 25% வரிவிலக்கு பொருந்தாது. எனவே, சுமார் 4,800 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்கள், அதாவது மொத்த ஏற்றுமதியின் பாதிக்குக்கூடிய ஒரு பகுதி மட்டுமே இந்த வரிவிதிப்பால் பாதிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், இந்த அமெரிக்க வரிவிதிப்பு இந்தியா மீது மிகச்சிறிய தாக்கமே ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் மதிப்பீடு செய்கின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதனால் ஏற்படும் இழப்பு 0.2% ஐத் தாண்டாது என ப்ளூம்பெர்க் நிறுவனத்திடம் ஒரு இந்திய பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விலைவாசி கட்டுப்பாட்டுக்காக இந்தியா, பால் மற்றும் விவசாய பொருட்கள் சந்தையை திறக்கவேண்டும் என்ற அமெரிக்க அரசின் அழுத்தத்துக்கு இந்திய அரசு இணங்காது எனவும், மாட்டிறைச்சி மற்றும் ‘அசைவப் பால்’ இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவின் தேசிய நலன்களை பாதுகாக்கும் வகையில் அரசு உறுதியுடன் செயல்படும் என்றும் அவை தெரிவித்தன.

கடந்த நிதியாண்டில், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 11.6% உயர்வுடன் 86.51 பில்லியன் டாலராக பதிவாகியுள்ளது.

Facebook Comments Box