ஷிபு சோரன் மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஷிபு சோரன் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த ஷிபு சோரன், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனைக்குச் சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அவரது உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது மகனும் தற்போதைய ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதற்கு முன் வெளியிட்ட எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பதிவில், “ஷிபு சோரனின் மறைவு சமூக நீதிக்குப் பெரும் இழப்பாகும். ஜார்க்கண்ட் மாநிலத்தின் உருவாக்கத்திற்காகவும், பழங்குடி சமூகங்களின் உரிமைகளை உறுதி செய்யவும் பாடுபட்டவர். பல்லாயிரக்கணக்கான மக்களின் நலனுக்காக களத்தில் செயல்பட்டவர். அவர் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு சேவை செய்தவர். அவரின் சமூக சேவை என்றும் நினைவில் நிலைத்திருக்கும். ஹேமந்த் சோரனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு சென்று, ஷிபு சோரனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஹேமந்த் சோரனும், அவரது மனைவி கல்பனா சோரனும் நேரில் சந்தித்து ஆறுதல் பெற்றனர். அதற்கு முன் பிரதமர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஷிபு சோரன் அடிமட்டத்தில் இருந்து எழுந்துத் திகழ்ந்த தலைவன். அரசியல் வாழ்வில் அவர் காட்டிய நம்பிக்கையும், அர்ப்பணிப்பும் வரலாற்றில் இடம் பெறும். பழங்குடி மக்களுக்கு அதிகாரம் வழங்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டிருந்தவர். அவரின் மரணம் வலியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கும் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள். ஹேமந்த் சோரனுக்கும் என் அனுதாபங்கள்” என தெரிவித்துள்ளார்.

போராட்டம் ஒத்திவைப்பு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ள வாக்கு மோசடி குறித்தப் போராட்டம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஷிபு சோரனின் இறுதி சடங்கில் முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருப்பதால், அந்தப் போராட்டம் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனை பெங்களூருவில் செய்தியாளர்களிடம் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மற்றும் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தியும் இறுதி சடங்கில் பங்கேற்க உள்ளனர் என கூறினர்.

பினராயி விஜயனின் இரங்கல்: “முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் மறைவு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆதிவாசி மக்களுக்கும், ஜார்க்கண்ட் மக்களுக்கும் தனது வாழ்நாள் முழுவதும் அவர் வழங்கிய சேவை நினைவில் நிற்கும். ஹேமந்த் சோரன் மற்றும் குடும்பத்தினருக்கும், அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலின் இரங்கல்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நிறுவுநர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், புகழ்பெற்ற பழங்குடி தலைவருமான ஷிபு சோரனின் மறைவு எனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சுரண்டலுக்கு எதிராக அவர் மேற்கொண்ட போராட்டம், சமூக நீதி காக்க அவருடைய வாழ்க்கை முழுக்க காட்டிய உறுதி சாற்றுதலாகும். ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். ஆதிவாசி மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடியவர். அவரை இழந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும், அந்த மாநில மக்களுக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

Facebook Comments Box