உத்தரப்பிரதேசத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பிடமிருந்து மீட்கும் நடவடிக்கை: யாதவர், முஸ்லிம் சமூகங்களை குறிவைத்த சுற்றறிக்கையை ரத்து செய்தார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில், அரசு நிலங்களை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, யாதவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் ரத்து செய்துள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, அரசு நிலங்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள 57,000-க்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகளில், பொதுநலத்திற்கான அரசு நிலங்கள் உள்ளன. இதில் கிராம சபை நிலங்கள், குளங்கள், தகன மைதானங்கள், உரக் குழிகள் மற்றும் கொட்டகைகள் போன்றவை அடங்கும். இந்த நிலங்களில் நடந்துள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிக்காக, பஞ்சாயத்து ராஜ் துறையின் தலைமையகத்தில் இருந்து இணை இயக்குநர் ஒருவரால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அது 75 மாவட்ட ஆட்சியர்கள், நில நிர்வாகத் துறையின் துணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. அந்த சுற்றறிக்கையில், யாதவர் மற்றும் முஸ்லிம் சமூகங்களை சார்ந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை அகற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதற்கெதிராக முதல்வரிடம் புகார்கள் வந்தன.

இதுதொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்ததாவது: “பாரபட்சமாகவும், ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவும் உள்ள இந்த உத்தரவை உடனடியாக இரத்துச் செய்ய உத்தரவிடுகிறேன். இந்த உத்தரவை வெளியிட்ட பஞ்சாயத்து ராஜ் துறையின் இணை இயக்குநர் சுரேந்திர நாத் சிங்கை பணியிலிருந்து இடைநீக்கம் செய்கிறேன். எந்த சமூகத்தையோ மதத்தையோ குறிவைத்து உத்தரவு பிறப்பது அரசியல் கொள்கைக்கு முற்றிலும் முரணானது.

அத்தகைய வார்த்தைகள் இனி எந்த அரசு தொடர்பு கடிதத்திலும் இடம்பெடக்கூடாது. அரசு முடிவுகள் எடுக்கப்படும் போது, அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகள், சமதர்மம், நிர்வாக ஒழுங்கு ஆகியவை முழுமையாக பின்பற்றப்பட வேண்டும். இவைகளை மீறும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் எச்சரித்தார்.

Facebook Comments Box